
கேரளாவில் உள்ள ஆதி சங்கரரின் பிறப்பிடமான காலடியில் இருந்து காஷ்மீரில் உள்ள சாரதா பீடம் வரை ஒரு சிறப்பு புல்லட் பேரணி நடைபெற உள்ளது. ‘தீவிரவாதத்துக்கு எதிரான புல்லட் பேரணி’ என்ற முழக்கத்துடன், இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணம் ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த நிகழ்வில், 100க்கும் மேற்பட்ட தேசபக்தி மிக்க ரைடர்கள் தங்கள் ராயல் என்பீல்டு பைக்குகளில் 3,600 கிலோமீட்டர் தூரம் பயணிக்க உள்ளனர். இந்த பேரணிக்கு தலைமை தாங்கும் டாக்டர் ஆர். ராமானந்த், ஒரு ஆன்மீகவாதி மட்டுமல்ல, எழுத்தாளர், 'அபிநவ குப்தா மேம்பட்ட ஆன்மீக ஆய்வு நிறுவனத்தின்' இயக்குனர். பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் இந்த பயணத்தைத் தொடங்குகிறார்.
நாட்டை அச்சுறுத்தும் துப்பாக்கிகளுக்கு எதிராக, ஜனநாயக புல்லட்கள்.. அதாவது பைக்குகள் மூலம் தேசபக்தியையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக இது அமையும். பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் சக்திகளுக்கு பதிலடி கொடுக்கவும் இந்த பைக் பேரணி நடத்தப்படுகிறது.
பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஐடி ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்தப் பேரணியில் பங்கேற்கின்றனர். சலோ எல்ஓசி (ChaloLOC) என்ற வாட்ஸ்அப் குழுவாகத் தொடங்கி, இப்போது ஒரு பெரிய கூட்டமாக மாறியுள்ளது. மணிகார்த்திக் (தலைவர்), சுகன்யா கிருஷ்ணா (செயலாளர்), சுமேஷ் (பொருளாளர்) ஆகியோர் உள்ளனர்.
கேரள பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர், கவர்னர் ஆரிஃப் முகமது கான் ஆகியோர் இந்த பயணத்திற்கு தங்கள் முழு ஆதரவை அளித்துள்ளனர். இந்த நிகழ்வுக்கு எந்த நிதியும் திரட்டப்படவில்லை. ஒவ்வொருவரும் தங்கள் சொந்த செலவில் இந்த பைக் பயணத்தில் பங்கேற்கின்றனர். இந்தப் பயணத்தில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் சுமார் ரூ.60,000 செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பயணம் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி, ஜூன் 12 ஆம் தேதி காஷ்மீரில் நிறைவடைகிறது.