
உலகின் மிகப்பெரிய கால்நடைச் சந்தைகளில் ஒன்றான ராஜஸ்தானின் புகழ்பெற்ற புஷ்கர் கால்நடை கண்காட்சியில் (புஷ்கர் மேளா), ரூ.21 கோடி மதிப்புள்ளதாகக் கருதப்பட்ட ஒரு எருமை சனிக்கிழமை உடல்நலக் குறைவால் திடீரென உயிரிழந்தது. இது கண்காட்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த எருமை கண்காட்சியின் முக்கிய ஈர்ப்பாக இருந்ததுடன், தினசரி ஆயிரக்கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்து வந்தது.
நியூஸ்18 செய்தி அறிக்கைப்படி, இந்த உயர் மதிப்புள்ள எருமைக்காகப் புஷ்கரில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எருமையின் உடல்நிலை குறித்துத் தகவல் கிடைத்தவுடன், கால்நடைப் பராமரிப்புத் துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் குழு உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தது.
"கடுமையான உடல் எடை மற்றும் விரைவாக மோசமடைந்து வந்த உடல்நலம் காரணமாக, மருத்துவர்கள் உடனடி சிகிச்சை அளித்தும் விலங்கைக் காப்பாற்ற முடியவில்லை" என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகித் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. இறந்த எருமையைச் சுற்றிலும் பல பார்வையாளர்களும் பராமரிப்பாளர்களும் நிற்கும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ விரைவில் வைரலானதைத் தொடர்ந்து, சிலர் எருமையின் பராமரிப்பாளர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். "இவ்வளவு ஹார்மோன்களைச் செலுத்துங்கள், ஆண்டிபயாடிக் மற்றும் வளர்ச்சி ஹார்மோன்களைச் செலுத்துங்கள். இயற்கைக்கு எதிராகச் செயல்பட்டு அதைப் 'இயற்கை' என்று கூறுங்கள். அருவருப்பான மனிதர்கள்," என்று நடிகை சினேகா உல்லால் கருத்துத் தெரிவித்துள்ளார்.
"வணிகத்தின் பெயரால் விலங்கு வன்கொடுமை," என்று மற்றொரு பயனர் கருத்துப் பதிவிட்டுள்ளார்.
"இது திடீர் மரணம் அல்ல. காப்பீட்டுக்காக (insurance) அதனைக் கொல்லத் திட்டமிட்டிருக்கிறார்கள்," என்று மூன்றாவது பயனர் சந்தேகம் கிளப்பினார்.
"21 கோடி ரூபாய் மதிப்பு இருந்தும் விதியை மீற முடியவில்லை என்று கற்பனை செய்து பாருங்கள்," என்றும் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
புஷ்கர் மேளா என அழைக்கப்படும் புஷ்கர் கால்நடை கண்காட்சி, ராஜஸ்தானின் புஷ்கரில் ஆண்டுதோறும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் நடைபெறும் ஒரு வார கால விழா ஆகும். இது உலகின் மிகப் பெரிய ஒட்டகம் மற்றும் கால்நடைச் சந்தைகளில் ஒன்றாகும்.
இந்தச் சந்தை ஒட்டகங்கள், குதிரைகள் மற்றும் கால்நடைகளை வர்த்தகம் செய்யும் ஒரு முக்கிய மையமாகத் திகழ்கிறது. அத்துடன், ஒட்டகப் பந்தயங்கள், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், கைவினைப் பொருட்கள் மற்றும் உள்ளூர் உணவு வகைகளை விற்கும் கடைகள் மூலம் ராஜஸ்தானின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தையும் இது வெளிப்படுத்துகிறது.