திட்டமிட்டபடி பிப்ரவரி 1-ல் பட்ஜெட் தாக்கல் - அருண் ஜெட்லி!

First Published Jan 5, 2017, 8:18 PM IST
Highlights


திட்டமிட்டபடி பிப்ரவரி 1-ல் பட்ஜெட் தாக்கல் - அருண் ஜெட்லி!

5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து எதிர்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், திட்டமிட்டபடி பிப்ரவரி 1ம் தேதியன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என மத்திய நிதி அமைச்சர் திரு.அருண்ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்தார். 


உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த மாநிலங்களில் பிப்ரவரி 4-ந் தேதி தொடங்கி மார்ச் 8-ந் தேதி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. உத்திரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. 

தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ம் தேதியன்று தொடங்குகிறது. பிப்ரவரி 1-ந்தேதியன்று மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. 

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சட்டபேரவைத் தேர்தல் நிறைவடைந்ததற்குப் பிறகு பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 5 மாநில தேர்தலைக் கருத்தில் கொண்டு, மத்திய பாரதிய ஜனதா அரசு, பட்ஜெட்டில் புதிய சலுகைகளை வெளியிட்டு அதன் வாயிலாக வாக்காளர்களைக் கவரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இதனிடையே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, ஐக்கிய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் டெல்லியில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு.குலாம் நபி ஆசாத், பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். இதனால், சட்டமன்ற தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த முடியாது என்று குறிப்பிட்ட அவர், மார்ச் மாதம் 8ம் தேதிக்கு பின்னர் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். 

இதனிடையே, எதிர்கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்த மத்திய நிதி அமைச்சர் திரு.அருண்ஜெட்லி, அறிவித்தப்படி பிப்ரவரி 1ம் தேதியன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார். பட்ஜெட் தாக்கல் செய்யும் மரபை மாற்றி அமைக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

click me!