பிஎஸ்என்எல்,எம்டிஎன்எல் ஊழியர்களுக்கு விரைவில் விஆர்எஸ் திட்டம்

By Selvanayagam PFirst Published Nov 4, 2019, 9:17 PM IST
Highlights

இழப்பில் செயல்பட்டுவரும் பிஎஸ்என்எஸ்,எம்டிஎன்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் விருப்ப ஓய்வு திட்டம்(விஆர்எஸ்) விரைவில் வரவுள்ளது
 

இதுதொடர்பாக அதிகாரிகள் ஊழியர்களிடம் பேசக்கூறி தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவுறுத்தியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன

பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களின் மறுமலர்ச்சிக்கான நிதித்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. அதில் ஊழியர்களுக்கான விஆர்எஸ் திட்டமும் அடங்கும். இரு பொதுத்துறை நிறுவனங்களில் இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைத்து நிறுவனத்தின் செலவைக் கட்டுப்படுத்துவது நோக்கமாகும். தற்போது 50 வயதுக்கு மேலாகஇருக்கும் ஊழியர்களுக்கு விஆர்எஸ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

விஆர்எஸ் திட்டத்துக்கு ஊழியர்கள் 2020-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கக் கடைசித் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. விஆர்எஸ் செட்டில்மென்டுக்காக மத்திய அரசு ரூ.17,160 கோடியும், ஓய்வுக்கால சலுகைகளுக்காக ரூ.12,768 கோடியும் வழங்க உள்ளது.

தற்போது பிஎஸ்என்எல் அலுவலகத்தில் 1.76 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள், இதில் 1.06 லட்சம் ஊழியர்கள் 50வயதுக்கு மேற்பட்டவர்கள். இந்த திட்டத்தைச் செயல்படுத்தினால், 80 சதவீதம் ஊழியர்கள் இந்த திட்டத்தைத் தேர்வு செய்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எம்டிஎன்எல் நிறுவனத்தில் 22ஆயிரம் ஊழியர்கள் இருக்கிறார்கள். பிஎஸ்என்எல் வருமானத்தில் 75 சதவீதம் ஊழியர்களின் ஊதியத்துக்குச் செலவாகிறது என்றால், எம்டிஎன்எல் ஊழியர்களுக்கு வருமானத்தில் 87 சதவீதம் ஊதியத்துக்குச் செலவாகிறது என்பதால், விஆர்எஸ்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், " கடந்த வெள்ளிக்கிழமை பிஎஸ்என்எஸ், எம்டிஎன்எல் வாரியத்தின் அதிகாரிகளை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சந்தித்துப் பேசினார். அப்போது ஊழியர்களுடன் முறைப்படி பேசி விஆர்எஸ் திட்டத்தைக் கண்டிப்பாகச் செயல்படுத்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டது.

click me!