முஸ்லிம்களுக்கான 4% இட ஒதுக்கீடு ரத்து செய்யும் கர்நாடகா அரசின் உத்தரவை மே 9 ஆம் தேதி வரை அமல்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் தற்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் கர்நாடகாவில் இஸ்லாமியர்களின் 4% இட ஒதுக்கீட்டை ரத்து செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டது. கர்நாடக அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை நிறுத்தி வைக்கிறோம் என்று கர்நாடக அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மே 9-ம் தேதி வரை இந்த வழக்கை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் மே 9 வரை கர்நாடக அரசின் முடிவை அமல்படுத்த கூடாது என்றும் தெரிவித்தனர். இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்க கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். கர்நாடக அரசும் இடஒதுக்கீடு ரத்து தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கப் போவதில்லை என்று உறுதியளித்தது.
இதையும் படிங்க : உலக ராணுவ செலவு இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..?
இதனிடையே நேற்று கர்நாடகாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது சரியான முடிவு தான் என்றும், மத ரீதியிலான இடஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறியிருந்தார்.
கர்நாடகாவில் கடந்த 30 ஆண்டுகளாக முஸ்லீம்களுக்கு 4% தனி இட ஒதுக்கீடு முறை அமலில் இருந்து வந்தது. இந்த சூழலில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த 4 % இட ஒதுக்கீடு, லிங்காயத், ஒக்கிலிகர் சமூகங்களுக்கு சமமாக பிரித்து வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்திருந்தது.
இதன் மூலம் அரசு வேலை வாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் லிங்காயத் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு 7 சதவீதமாகவும், ஒக்கலிக்கர் சமூகத்தினருக்கான ஒதுக்கீடு 6 சதவீதமாக அதிகரித்துள்ளது. தேர்தலை முன்னிட்டு இதுபோன்ற நடவடிக்கையில் ஆளும் பாஜக இறங்கி இருக்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று பிரச்சாரம் செய்தனர். இந்த நிலையில் உச்சநீதிமன்றம் இன்று முஸ்லிம்களுக்கான 4% இட ஒதுக்கீடு ரத்து செய்யும் கர்நாடகா அரசின் உத்தரவை மே 9 ஆம் தேதி வரை அமல்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க : கர்நாடகா மாநிலத்தில் ஒக்கலிக்கர், லிங்காயத் சமூகத்தினரை ஈர்க்க பாஜக புதிய திட்டம்!!