
வெளிமாநில தொழிலாளி மீது தாக்குதல்
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்து, சீக்கிய மதத்தினரை குறிவைத்தும், வெளி மாநிலத்தவர்களை குறிவைத்தும் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புத்காமில் மாவட்டத்தில் உள்ள சதூரா கிராமத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வெளி மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அப்போது ஜூன் 2 ஆம் தேதி வியாழக்கிழமை இரவு பயங்கரவாதிகள் சுட்டதில் பீகாரைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி 17 வயது தில்குஷ் குமார் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார். அவர்கள் ஸ்ரீநகரில் உள்ள SMHS மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர், அங்கு தில்குஷ் குமாரை சோதித்த மருத்தவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து துப்பாக்கி சூடு நடைபெற்ற பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர்.
ஒரே நாளில் இரண்டு சம்பவம்
குல்காமில் ராஜஸ்தானைச் சேர்ந்த வங்கி மேலாளர் விஜய் குமார் சுட்டுக் கொல்லப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. வங்கி அலுவலுகத்திற்கு விஜய்குமார் சுடப்பட்டு இருந்தார். இந்த சம்பவத்திற்கு தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒரே நாளில் நடந்த இரண்டாவது கொலைக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், , "ஒரே நாளில் இதுபோன்ற இரண்டு சம்பவம் நடைபெற்றது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். உள்ளூர் அல்லாத தொழிலாளர்கள் மீதான தாக்குதலை கடுமையாக கண்டிக்கதக்கது எனவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அவசர ஆலோசனை
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரா தலைவர் சமந்த் கோயல் ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து யூனியன் பிரதேசத்தின் பாதுகாப்பு நிலைமை குறித்து விவாதித்தனர்.