
நாடு முழுவதும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி திங்கட்கிழமை தொடங்குகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளிகள், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள். தமிழ்நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளிகள் 20.3 லட்சம் பேர் உள்ளனர். சுகாதார பணியாளர்கள் 5.65 லட்சமும், முன்களப் பணியாளர்கள் 9.78 லட்சம் பேரும் இருக்கின்றனர். மொத்தமாக தமிழகத்தைப் பொறுத்தவரை 35 லட்சத்து 46 ஆயிரம் பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்களாக உள்ளனர். இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்கள் முடிவடைந்தவர்கள் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும். அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதிக்கு முன்பாக இரண்டாவது டோஸ் செலுத்தியவர்கள் திங்கட்கிழமை பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளலாம்.
பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கு கோவின் செயலியில் முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவு செய்யாமலும் நேரடியாக தடுப்பூசி மையத்திகே சென்றும் 3வது டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். ஏற்கனவே பயன்படுத்திய அடையாள அட்டை அல்லது கொரோனா தடுப்பூசி சான்றிதழை கொண்டு செல்வது அவசியமாகும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இணை நோய்களுக்கான சான்றிதழ் ஏதும் சமர்ப்பிக்க தேவை இல்லை. தாங்கள் சுயமாக மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்ள மட்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்களப் பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தங்கள் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். முதல் இரண்டு டோஸ் எந்த தடுப்பூசி போடப்பட்டதோ தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் அதே நிறுவன டோஸ்தான் போடப்படும். அனைத்து தடுப்பூசி மையங்களிலும் பூஸ்டர் டோஸ் போடுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.சென்னை பட்டினம்பாக்கத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.