
டெல்லி உயர்நீதிமன்றதுக்கு இன்று காலை தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
டெல்லி போலீசாரை இன்று காலை மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, அந்த மர்ம நபர், உயர்நீதிமன்ற வளாகத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், அந்த வெடிகுண்டு, ஒரு மணி நேரத்தில் வெடித்து சிதறும் என்றும் அவர் கூறினார். இதையடுத்து டெல்லி போலீசார்,
உயர்நீதிமன்ற வளாகத்தை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரமாக தேடியும், வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை. இருப்பினும் தீயணைப்பு துறை வாகனங்கள் உள்பட நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், செல்போனில் பேசியவர் வடக்கு டெல்லியில் இருந்து பேசியதும், அந்த எண் உத்தரபிரதேச மாநிலத்தில் வாங்கப்பட்டதும் தெரியவந்தது.
மீண்டும் அந்த எண்ணுடன் தொடர்பு கொண்டபோது அந்த செல்போன் எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். வெடிகுண்டி மிரட்டல் விடுதத நபரை தேடும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.