
Namma Metro Extension to Hosur : பெரும் எதிர்ப்பை ஏற்படுத்திய நம்ம மெட்ரோவை தமிழ்நாட்டின் ஓசூருக்கு நீட்டிக்கும் திட்டம், தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லை என்று BMRCL மாநில அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியான தகவல்களின்படி, கர்நாடகாவின் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (BMRCL) நம்ம மெட்ரோ மற்றும் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) அமைப்புகள் வெவ்வேறு மின்சார தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால், அவற்றை ஒருங்கிணைக்க முடியாது என்று அரசுக்கு அளித்த அறிக்கையில் கூறியுள்ளது.
ஆர்.வி. சாலை - பொம்மசந்திராவை இணைக்கும் மெட்ரோ மஞ்சள் வழித்தடத்தை, பொம்மசந்திராவிலிருந்து 23 கி.மீ. தூரம் நீட்டித்து, தமிழ்நாட்டின் ஓசூரை இணைப்பது தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளுமாறு கிருஷ்ணகிரி எம்.பி. ஏ.செல்லகுமார் மத்திய அரசிடம் சிறப்பு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனை தொடர்ந்து இரு மெட்ரோ நிறுவனங்களும் தங்களது சொந்த ஆய்வுகளை நடத்தின. பொம்மசந்திராவிலிருந்து தமிழ்நாட்டின் எல்லையில் உள்ள கடைசி புறநகரான அத்திபெலே வரை மெட்ரோவை நீட்டிக்க BMRCL தனது சொந்த ஆய்வை நடத்தியது. முன்மொழியப்பட்ட திட்டத்தின்படி, இரு மாநிலங்களின் எல்லையில் 300 மீட்டர் இடைவெளியில் இரண்டு நிலையங்கள் கட்டப்பட வேண்டும். இந்த 300 மீட்டர் தூரத்தை நடைபாதை மேம்பாலம் மூலம் கடக்க வேண்டும். இது சாத்தியமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நாங்கள் எங்கள் கருத்தை மாநில அரசுடன் பகிர்ந்துள்ளோம். இறுதி முடிவை அரசு எடுக்கும் என்று BMRCL அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) 25 KV AC ஓவர்ஹெட் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. ஆனால், நம்ம மெட்ரோ நெட்வொர்க் 750V DC மின்சாரத்தைப் பயன்படுத்தும். இவ்வாறு இரு மாநில மெட்ரோ அமைப்புகளும் வெவ்வேறு மின்சார தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால், இரண்டையும் ஒருங்கிணைக்க முடியாது. இதுகுறித்து BMRCL மாநில அரசுக்குத் தெரிவித்துள்ளது.
ஓசூர் தொழிற்பேட்டையை வலுப்படுத்த ஓசூர்-பொம்மசந்திரா மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த தமிழகம் ஆர்வமாக இருந்தது. ஓசூருக்கு மெட்ரோவை நீட்டிப்பதால் கன்னடர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. கர்நாடகாவின் தொழிற்சாலைகள், முதலீடுகள் அங்கு செல்லக்கூடும். அங்குள்ள தொழிலாளர்களுக்கு இது அதிக பயன் தரும். இதனால் மாநிலத்திற்கு லாபத்தை விட நஷ்டமே அதிகம் என்று கன்னடர்கள் எதிர்த்தனர். எந்தக் காரணத்திற்காகவும் மெட்ரோவை தமிழ்நாட்டுடன் இணைக்கக் கூடாது என்ற பிரச்சாரத்தையும் அவர்கள் மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.