
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியை அவைக்கு வரவழைக்கும் முயற்சியாக, மத்திய பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்துள்ளது. முன்னதாக, நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, மிசோரம் மாநிலம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது உட்பட காங்கிரஸ் ஆட்சியின் கீழ் நடந்த வன்முறை நிகழ்வுகளை அவர் மேற்கோள் காட்டினார். ஆபரேஷன் ஜெரிகோவுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பிரிவினைவாத அமைப்பான மிசோ தேசிய முன்னணிக்கு எதிராக விமானப்படையை இந்திரா காந்தி பயன்படுத்தினார்.
மக்களவையில் பதிலுரையாற்றிய பிரதமர் மோடி, “1966 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி, மிசோரமில் ஆதரவற்ற குடிமக்கள் மீது காங்கிரஸ் விமானப்படை தாக்குதல் நடத்தியது. மிசோரம் மக்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா? அவர்களின் பாதுகாப்பு இந்திய அரசின் பொறுப்பல்லவா?” என்றார். “இன்று வரை, மார்ச் 5 ஆம் தேதி மிசோரம் மாநிலத்தில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அந்த காயங்களை போக்க காங்கிரஸ் முயலவில்லை. இந்த உண்மையை நாட்டு மக்களிடம் இருந்து காங்கிரஸ் மறைத்தது. அப்போது ஆட்சி செய்தது யார்? இந்திரா காந்தி.” என்றும் பிரதமர் மோடி கூறினார்.
மேலும், “1962இல், சீனா இந்தியாவைத் தாக்கியபோது, நம் நாட்டு மக்கள் தங்களை அரசாங்கம் காப்பாற்றும் என்று எதிர்பார்த்தனர். அப்போது வானொலி வாயிலாக உரையாற்றிய அப்போதைய பிரதமர் நேரு, ‘அசாம் மக்களுடன் என் இதயம் செல்கிறது’ என்றார். இதுதான் நிலைமை. அந்த வானொலி உரை நேரு எப்படி அவர்களை கைவிட்டார் என்பதை உணர்த்துகிறது.” என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
அதன் தொடர்ச்சியாக, இந்திரா காந்தியின் நடவடிக்கை குறித்து பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலர் அவரை விமர்சிக்கின்றனர்; சிலர் அவரை நியாயப்படுத்தி பேசி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுத்துள்ள BlueKraft Digital Foundation தலைமை செயல் அதிகாரி அகிலேஷ் மிஸ்ரா, 1966இல் நமது சொந்த மக்கள் மீது இந்திரா காந்தி விமானப்படையை பயன்படுத்தியதை சிலர் நியாயப்படுத்துவது ஆச்சரியமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
மிசோரம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் நிலவும் மோசமான நிலைமை குறித்து ட்வீட் செய்து அகிலேஷ் மிஸ்ரா தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். “1966இல் இந்திரா காந்தி சொந்த மக்கள் மீது விமானப்படையை பயன்படுத்தினார். இதற்கான காரணம் மிகவும் சிக்கலானது. 1950 களில், பண்டித ஜவஹர்லால் நேருவின் கவனம் காஷ்மீரின் பிரிவினைவாத அடையாளத்தைப் பாதுகாப்பதில் இருந்தது. நேரு வடக்கு கிழக்கை புறக்கணித்தார். இதனால் வடக்கு கிழக்கு மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அவர்களின் வளர்ச்சிக்கான தேவை, கலாச்சார அடையாளம் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன.” என அகிலேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
‘என் இதயம் அசாம் மக்களுடன் உள்ளது’. இவை சீனாவால் தோற்கடிக்கப்பட்ட ஒரு மனிதனின் வார்த்தைகள் மட்டுமல்ல. எதைப்பற்றியுமே கவலைப்படாத ஒரு மனிதனின் வார்த்தைகள் எனவும் அகிலேஷ் மிஸ்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “புறக்கணிப்பு மற்றும் வளர்ச்சியின்மை ஆகியவை வடகிழக்கில், குறிப்பாக மிசோரம் மற்றும் நாகாலாந்தில் கோபத்தைத் தூண்டின. இதை ஆரம்பத்திலேயே நீக்கியிருக்கலாம் அல்லது சரியான நேரத்தில் சரி செய்திருக்கலாம். ஆனால், சாத்தியமற்ற சூழ்நிலை உருவாகும் வரை மக்களின் கோபம் வளர அனுமதிக்கப்பட்டது.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு அதேபோன்றதொரு விஷயத்தை இந்திரா காந்தி பஞ்சாபிலும் செய்தார் என சுட்டிக்காட்டியுள்ள அகிலேஷ் மிஸ்ரா, “1984இல் பயங்கரவாதிகள் திடீரென தோன்றவில்லை. பல ஆண்டுகளாக அவர்கள் பலம் பெற முதலில் அனுமதிக்கப்பட்டனர். அரசியல் நோக்கங்களுக்காகவும் அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்..” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு பக்கம் திரும்பிய நாடாளுமன்றம்: திமுகவை டார்கெட் செய்யும் பாஜக அமைச்சர்கள் - என்ன காரணம்?
“1966இல் இந்திரா காந்தி மிசோரம் மீது குண்டுவீசித் தாக்கியபோதும், 1984இல் ஆப்பரேஷன் புளூஸ்டார் நடந்தபோதும். அத்தகைய நடவடிக்கைகள் தேவைப்பட்டது என்பது, எதிர்பாராத திடீர் அவசரத்தின் காரணமாக அல்ல, மாறாக பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டதால் அல்லது அதைவிட மோசமான அரசியல் லாபத்திற்காக செய்யப்பட்டது. தேச நலனை காட்டிலும், அரசியல் நலன்களுக்காக காங்கிரஸால் இது செய்யப்பட்டது. தலைமையின் தோல்விகளை மறைக்கவே இது செய்யப்பட்டது.” என்றும் அகிலேஷ் மிஸ்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.