டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும்: பாஜக ஆர்ப்பாட்டம்!

By Manikanda Prabu  |  First Published Oct 4, 2023, 1:48 PM IST

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வலியுறுத்தி ஆம் ஆத்மி அலுவலகம் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்


டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. அதன்படி, 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. டெல்லி ஆம் ஆத்மி அரசின் இந்த புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக, சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வரும் முன்னாள் கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், மதுபான கொள்கையில் முறைகேடு தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Latest Videos

undefined

மணிப்பூர் விவகாரம், டெல்லி அதிகாரத்துவ சட்டம் உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்தான் இந்த சஞ்சய் சிங். அவரது சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு அப்போது கண்டம் தெரிவித்த ஆம் ஆத்மி கட்சி, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளின் வலுவான குரலாக அவர் இருப்பதாகவும், வாய்ப்பு கிடைத்தால் அவரை பாஜக சிறையில் அடைத்திருக்கும் எனவும் கூறியது நினைவுகூரத்தக்கது.

சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை சோதனைக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியையும், தொழிலதிபர் அதானியையும் கேள்விக்கு உள்ளாக்கியதன் விளைவாக இந்த சோதனை நடக்கிறது என  ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் ரீனா குப்தா தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “இது அவர்களின் (பாஜக) அவநம்பிக்கையான முயற்சி. அவரது (சஞ்சய் சிங்) வீட்டில் எதுவும் கிடைக்காது. 2024 தேர்தல் வரப்போகிறது. அதில் தோற்போம் என்பது அவர்களுக்குத் தெரியும். தேர்தல் நெருங்கி வருவதால் சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அனைத்து நிறுவனங்களும் செயல்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

“அமலாக்கத்துறை, சிபிஐயின் நூறு அதிகாரிகளை வைத்து, மக்களைக் கைது செய்து சித்திரவதை செய்துள்ளனர். ஆனால், இதுவரை மத்திய அரசும், அதன் அமைப்புகளும் ஒரு ரூபாய் கூட ஊழலை நிரூபிக்கவில்லை. வரும் லோக்சபா தேர்தலில் தோற்கப்போவது பிரதமர் மோடிக்கு தெரியும்; ஆம் ஆத்மிக்கு பாஜக பயப்படுவதையே இது காட்டுகிறது. இந்த தோல்வி பயத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் மீது ரெய்டு நடத்துகிறார்கள். சஞ்சய் சிங்கி மீது ஒரு பைசா ஊழலை கூட அவர்களால் நிரூபிக்க முடியாது.” என டெல்லி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.

நியூஸ்கிளிக் இணையதள நிறுவனர் பிரபீர் புர்காயஸ்தா கைது! சீனாவில் இருந்து பணம் பெற்ற குற்றச்சாட்டில் நடவடிக்கை

இதனிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வலியுறுத்தி ஆம் ஆத்மி அலுவலகம் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். “மனிஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் ஜாமீன் வழங்கப்படவில்லை, ஆனால் அவர்களை காப்பாற்ற அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். அவர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்துவிட்டு, கெஜ்ரிவாலும் ராஜினாமா செய்ய வேண்டும். ஏனெனில் அவர்தான் இதற்கெல்லாம் மூல காரணம்.” என பாஜக எம்.பி. மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் டெல்லி சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!