
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்த அமோக வெற்றி, அடுத்த சில மாதங்களில் வர இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் அந்த கட்சியின் வேட்பாளரே வெற்றி பெற சாத்தியங்கள் அதிகரித்துள்ளன.
குடியரசுத் தலைவர் தேர்தல்
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடிவடைய இருக்கிறது. துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்டு மாதம் முடிகிறது. அதன்பின் புதிய குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்படும்.
இந்த தேர்தலில் 29 மாநிலங்கள், டெல்லி,யூனியன் பிரதேசங்களின் 4 ஆயிரத்து 120 எம்.எல்.ஏ.க்கள், மக்களவை, மாநிலங்களவையின் 776 எம்.பி.கள் வாக்களிக்க இருக்கிறார்கள்.
இதில் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும், மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்கு மதிப்பு மாறுபடும். ஆனால், எம்.பி.யின் ஒட்டுமதிப்பு 708 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பா.ஜனதா ஆட்சி
மத்தியில் ஆளும் பாரதியஜனதா கட்சி இப்போது, மஹாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, சட்டீஸ்கர், ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், அசாம் மாநிலங்களில் ஆட்சி நடத்துகிறது. ஜம்மு-காஷ்மீர், ஆந்திரபிரதேசம் என இரு மாநிலங்களில் கூட்டணியிலும் அந்த கட்சி இருக்கிறது.
வெற்றி எளிது
இதனால், பாரதிய ஜனதா கட்சி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளர் எளிதாக வெற்றி பெறும் சூழல் நிலவி வருகிறது.
இடைவெளி குறைந்தது
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரதியஜனதா கட்சியின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெற 5 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன், வாக்கு மதிப்புகளின் அடிப்படையில் அந்த கட்சிக்கு 75,076 வாக்குகள் தேவைப்பட்டது.
ஆனால், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் கிடைத்த வெற்றியும், மணிப்பூர், கோவா, ஆகியவற்றில் கிடைத்த கனிசமான இடங்களும், அந்த கட்சிக்கு தேவைப்படும் வாக்குகளின் எண்ணிக்கையை 20 ஆயிரமாக குறைத்துவிட்டது. ஏறக்குறைய 50 ஆயிரம் வாக்குகளை அந்க கட்சி ஈட்டியுள்ளது.
இந்த மீதமுள்ள 20 ஆயிரம் வாக்குகளை பாரதிய ஜனதா கட்சி ஒடிசமா மாநிலத்தின் ஆளும் கட்சியான பிஜூ ஜனதா தளம், தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க. ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பெற முயற்சிக்கலாம். அதாவது, இந்த கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.கள் ஆதரவைப் பெற்றால், பாரதிய ஜனதா கட்சி நிறுத்தும் வேட்பாளரே குடியரசுத் தலைவர், துணைக்குடியரசுத் தேர்தலில் எந்தவித இடையூறும் இன்றி வெற்றி பெறவார்.
மாநிலங்களவை
அதுமட்டுமல்லாமல், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு கிடைத்த வெற்றியால், அடுத்த ஆண்டு அந்த கட்சிக்கு மாநிலங்கள் அவையில் எண்ணிக்கை அதிகரிக்கும்.
அடுத்த ஆண்டு மாநிலங்கள் அவையில் 68 உறுப்பினர்கள் இடம் காலியாகிறது. இதில் 10 பேர் உத்தரப்பிரதேசத்திலும், ஒருவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்தும் தேர்வுசெயப்படுவார்ள். மேலும் மத்தியப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, ஹரியானா, ஆந்திர பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய பாரதியஜனதா, அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இருந்தும் எம்.பி.கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தடையில்லை
இதனால், மாநிலங்கள் அவையிலும் அந்த கட்சிக்கு எம்.பி.கள் பலம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மக்கள் அவையில் போதுமான பலத்துடன் பாரதிய ஜனதா இருக்கிறது. மாநிலங்கள் அவையிலும் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அந்த கட்சி கொண்டு வரும் எந்த மசோதாவையும், எதிர்க்கட்சிகள் இடையூறு, தடைகள் இன்றி நிறைவேற்றிக் கொள்ள முடியும்.