
ஹரித்துவாரில் இருந்து டெல்லி புறப்பட்ட போது மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி ஹெலிகாப்டரில் ஏற முயன்றபோது கால் தடுக்கி கீழே விழுந்தார்.
உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாருக்கு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி இன்று சென்று இருந்தார். அந்த மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததையடுத்து, அங்கு கட்சி உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்களிடம் ஆலோசனை நடத்த, கட்சித் தலைமை அருண் ஜெட்லியை அனுப்பி இருந்தது.
இந்நிலையில், ஆலோசனை, ஆய்வுக் கூட்டத்தை முடித்து, ஹெலிகாப்டரில் டெல்லி புறப்பட அமைச்சர் ஜெட்லி தயாரானார். அப்போது, ஹெலிகாப்டரில் ஏற முயன்றபோது, திடீரென கால் தடுக்கி கீழே விழுந்தார்.
உடனடியாக, அவரின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தூக்கினர், இதில் ஜெட்லிக்கு காலிலும், கையிலும் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மீண்டும் ஓய்வு அறைக்கு சென்ற ஜெட்லி முதலுதவி சிகிச்சை எடுத்துக்கொண்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். அதன்பின், ஹெலிகாப்டரில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் நிலை இப்போது நலமாக இருப்பதாக அவரின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.