போதை பொருள் பிரச்சினையை தீர்க்க ‘சிறப்பு அதிரடி படை’ - கேப்டன் அமரிந்தர் சிங் உறுதி

First Published Mar 12, 2017, 5:09 PM IST
Highlights
amarinder singh wins in punjab


பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் போதைப் பொருள் பிரச்சினையை தீர்க்க சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும், மாநிலத்தை முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக மாற்றப்படும் என்று காங்கிஸ் தலைவர் கேப்டன் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

காங். வெற்றி

பஞ்சாப் மாநிலத்துக்கு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 77 இடங்களைப் கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க இருக்கிறது. ஆளும் சிரோமணி அகாலிதளம், பாரதியஜனதா கூட்டணிக்கு பெரிய அதிர்ச்சி அளித்த மக்கள், முதல் முறையாக தேர்தல் களம் கண்ட ஆம் ஆத்மி கட்சிக்கு 2-ம் இடம் அளித்து எதிர்க்கட்சி வரிசையில் அமரவைக்க இருக்கிறார்கள்.

இந்நிலையில், பாட்டியாலா நகரில் காங்கிரஸ் தலைவர் கேப்டன் அமரிந்தர் சிங் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

நீர் வேண்டும்

சட்லஜ்-யமுனா இணைப்பு கால்வாய் வழக்கு  வரும் 28-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. இருந்தாலும், மாநிலத்துக்கு போதுமான அளவு நீரைப் பெற்றுத்தருவது மிக முக்கியம். பஞ்சாப் மாநிலத்துக்கு போதுமான நீர் இல்லாத நிலையில், மற்ற மாநிலங்களுக்கு நீர் கொடுப்பது குறித்து கேள்விக்கே இடமில்லை.

மாநிலத்தில் 60 சதவீதம் வேளாண்மை நிலம் இருகிறது. ஆனால், 80 லட்சம் கன அடி நீர்தான் கிடைக்கிறது. ஆனால், ஹரியானாவில் 40 சதவீதம் விவசாயம் நிலம் இருக்கிறது, அங்கு 1.2 கோடி கன அடி நீர் இருக்கிறது.

முதலீட்டுக்கு ஏற்ற மாநிலம்

தேர்தல் வாக்குறுதியில் மக்களிடம் என்ன விதமான வாக்குறுதிகள் கொடுத்தமோ அதை நிச்சயம் நிறைவேற்றுவோம். மாநிலத்தை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற, எளிதாக முதலீடு செய்ய ஏதுவாக இருக்கும் மாநிலமாக நாங்கள் மாற்றுவோம். தொழில்துறை கொள்கையை முதலீட்டாளர்களுக்கு ஏற்றவகையில் விரைவில் வெளியிடுவோம்.

ஆம் ஆத்மி அலையா?

மாநிலத்தில் இப்போது நிலவும் போதைப் பொருள் பிரச்சினையைத் தீர்க்க சிறப்பு அதிரப்படி அமைக்கப்பட்டு தீர்க்கப்படும். காங்கிரஸ் கட்சியின் புதிய அலை மாநிலத்தில் வீசி வருகிறது, ஆனால், ஆம் ஆத்மி கட்சியின் அலை எங்கும் வீச வில்லை.

பழிவாங்கு அரசியல் கிடையாது

நாங்கள் ஆட்சிக்கு வந்தபின், எதிர்க்கட்சியினரையோ அல்லது பாதல் குடும்பத்தினரையோ அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையுடன் செயல்பாடுகளில் ஈடுபடமாட்டோம்.  ஆனால், போலீஸ் துறையில் சில சீர்திருத்தங்கள் செய்யப்படும். மாநிலத்தில் கடும் நிதிப்பற்றாக்குறை நிலவுகிறது. அதைக்கண்டு நாங்கள் அச்சப்படவில்லை. பஞ்சாப் மாநிலத்தை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டுவர நாங்கள் பாடுபடுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

16-ந்தேதி பதவி ஏற்பு...

காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேப்டன் அமரிந்தர் சிங் வருகிற 16-ந்தேதி முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இவருக்கு எதிரான சட்லஜ்-யமுனா இணைப்பு கால்வாய் வழக்கு வரும் 28-ந்தேதி விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், அவர் பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!