
டெல்லியில் கடந்த 2 நாட்களாக நடந்த பாரதிய ஜனதா செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர், கட்சியின் தலைவர், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை அனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை எனத் தெரியவந்துள்ளது.
பா.ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் கடந்த கடந்த 24, 25ந்தேதிகளில் டெல்லி தல்கோத்ரா அரங்கில் நடந்தது. அதில் பா.ஜனதா எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பிரதமர் மோடி, கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா , 13 மாநிலங்களின் முதல்வர்கள், மாநிலத் தலைவர்கள், மூத்த தலைவர்கள் என ஆயிரத்து 400 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்ட அடையாள அட்டை சீனாவில் தயாரிக்கப்பட்டவையாக இருந்தது. இது குறித்து படங்களை ஆங்கில முன்னணி நாளேட்டின் ஆசிரியர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த அடையாள அட்டையில் ஆங்கிலத்திலும், சீன மொழியிலும் எழுதப்பட்டு இருந்தது.
நாடுமுழுவதும் இந்தி மொழியை அமல்படுத்த வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்கள் முழுக்கமிட்டு வரும் நிலையில், அந்த அடையாள அட்டையில் இந்தி எழுத்தே இல்லை. மேலும், பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ என பிராசாரம் செய்து வரும் நிலையில், அடையாள அட்டை ‘மேட் இன் சீனா’வில் தயாரிக்கப்பட்டவையாக இருந்தது.
ஆனால், டுவிட்டரில் இதைப் பார்த்த பா.ஜனதா ஆதரவாளர்கள், இது போலியான அடையாள அட்டை, ‘மேக் இன் இந்தியா’வை வலியுறுத்தும் பிரதமர் மோடியின் அரசு இதுபோன்ற அட்டைகளை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யாது என்று தெரிவித்தனர்.
ஆனால், மேலும், சில நெட்டிசன்கள், பா.ஜனதா செயற்குழுவில் வழங்கப்பட்டது சீனாவில் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டைதான் என்று தங்களுக்கு கிடைத்த படங்களை பகிர்ந்தனர். இதனால் டுவிட்டரில் இது தொடர்பான வாதங்கள் தொடர்ந்து ஓடின.