அவங்க செஞ்ச பாவத்துக்கு மக்கள் பாதிக்கப்படனுமா? பா.ஜ.க.வை புரட்டி எடுத்த மம்தா பானர்ஜி..!

By Kevin KaarkiFirst Published Jun 11, 2022, 2:36 PM IST
Highlights

சில அரசியல் கட்சிகள் தான் இதற்கு பின்புலமாக இருக்கின்றன. அவர்கள் வன்முறையை தூண்ட முயற்சி செய்து வருகின்றனர்.

இடைநீக்கம் செய்யப்பட்ட பா.ஜ.க. தலைவர் முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் பல்வேறு நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டாவது நாளாக போராட்டக் காரர்கள் மற்றும் போலீசார் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. 

முகமது நபிகள் கருத்து சர்ச்சை கருத்து தெரிவித்ததால் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி தனது கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார். சில அரசியல் கட்சிகள் கலவரத்தை தூண்ட முயற்சி செய்து வருகின்றன. பா.ஜ.க. செய்த பாவங்களுக்கு பொது மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும் என அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மம்தா பானர்ஜி கேள்வி:

“நான் இதை ஏற்கனவே தெரிவித்து இருக்கிறேன். இரண்டு நாட்களாக, ஹௌராவில் வன்முறை மற்றும் அடிதடி போன்ற சம்பவங்களால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. சில அரசியல் கட்சிகள் தான் இதற்கு பின்புலமாக இருக்கின்றன. அவர்கள் வன்முறையை தூண்ட முயற்சி செய்து வருகின்றனர்.” 

“ஆனால் இதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பா.ஜ.க. பாவம் செய்து இருக்கிறது, இதற்கு பொது மக்கள் பாதிக்கப்பட வேண்டுமா?,” என்று அவர் தனது டுவிட்டர் அக்கவுண்டில் குறிப்பிட்டு இருக்கிறார்.

கடும் வன்முறை:

முகமது நபிகள் குறித்து பா.ஜ.க.வை சேர்ந்த நுபுர் ஷர்மா கூறிய கருத்துக்களுக்கு எதிராக ஹௌராவில் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தின் போதே அந்த பகுதியில் வன்முறை வெடித்தது. இதை அடுத்து இன்று காலை அதே பகுதியில் மற்றொரு மோதல் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இந்த வன்முறையின் போது போலீஸ் தரப்பில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. பதிலுக்கு போராட்டக்காரர்கள் தரப்பில் கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. 

இந்த இடத்தில் பாதுகாப்பு நாடவடிக்கையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மேலும் திங்கள் கிழமை வரை இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக கடந்த வியாழன் கிழமை அன்று ஹௌராவில் சாலைகளை மறித்து தடுப்புகள் போடப்பட்டன. இதை அடுத்து முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி போராட்டத்தை கைவிட்டு, டெல்லிக்கு சென்று போராட்டம் நடத்த வலியுறுத்தினார். 

click me!