
அனைத்து குடும்பங்களுக்கும் 3 இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவா மாநிலத்தில் பிப்ரவரி 14ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், கோவாவின் வளர்ச்சிக்காக பல்வேறு சிறப்பு திட்டங்கள் குறித்து வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இதில், நுகர்வோருக்கு 3 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அடுத்த 5 ஆண்டுகளுக்கு உயர்த்தமாட்டோம். மலிவு விலைகளில் விடுகள் கட்டித்தரப்படும். முதியோருக்கு வழங்கப்படும் பென்சன் தொகை மாதத்துக்கு 3000 ரூபாயாக உயர்த்தப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. கோவா மாநிலம் சுற்றுலாத் துறையை பெரிதும் சார்ந்திருக்கிறது. எனவே, சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்தவும் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது.
3 சிலிண்டர் இலவசம் என்பது சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி என்பதால் இந்த அறிவிப்பு கோவா மாநிலத்துக்கு மட்டுமே பொருந்தும். சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அனைத்து குடும்பத்திற்கும் 3 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்பது பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருப்பது மகிழ்ச்சியான செய்தியாகவே பார்க்கப்படுகிறது.