டெல்லியில் இன்று பிரதமர் மோடியின் ரோடு ஷோ: போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு

By SG BalanFirst Published Jan 16, 2023, 10:25 AM IST
Highlights

டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பேரணி நடைபெறவுள்ளதை முன்னிட்டு பல்வேறு சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்தில் இன்றும் நாளையும் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடக்க உள்ளது. இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் ஆகியோருடன் மூத்த பாஜக தலைவர்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.

இக்கூட்டத்துக்கு முன்பாக, பாரதீய ஜனதா கட்சியின் தேசிய மற்றும் மாநில அளவிலான தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பிற பொறுப்பாளர்கள் பங்கேற்கும் கூட்டம் ஒன்றும் நடக்க இருக்கிறது.

செயற்குழுக் கூட்டத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் ரோடுஷோ நடத்தவும் திட்டமிடப்பட்டது. செவ்வாய்க்கிழமை நடப்பதாக இருந்த இந்த ரோடுஷோ இன்றைய தினம் நடைபெறுவதாக மாற்றப்பட்டது.

அதன்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு படேல் சதுக்கத்தில் தொடங்கி நாடாளுமன்றக் வளாகம் வரை இந்த பேரணி நடக்க உள்ளது. மோடியின் இந்த ரோடுஷோவால் டெல்லியின் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

யாரும் சாதிக்க முடியாததை சாதித்தவர் மோடி: பாகிஸ்தான் எழுத்தாளர் புகழாரம்

Delhi | Hoardings and cut-outs put up by BJP ahead of PM Narendra Modi's road show later today.

Visuals from Patel Chowk area and Sansad Marg. pic.twitter.com/0rjnBlNWHD

— ANI (@ANI)

அசோகா ரோடு, சன்சத் மார்க், டால்ஸ்டாய் ரோடு, ரஃபி மார்க், ஜந்தர் மந்தர் ரோடு, இம்தியாஸ் கான் மார்க், பங்களா சாஹிப் லேன் ஆகியவற்றில் இன்று பிற்பகல் 2.30 மணி முதல் 5 மணிவரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

பொதுமக்கள் இந்தப் போக்குவரத்து மாற்றங்களை அனுசரித்து தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு டெல்லி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் இரண்டாவது ரோடு ஷோ இன்று நடக்கிறது. சில நாள்களுக்கு முன் அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெற்ற 50 கி.மீ. தூர பேரணியில் மோடி கலந்துகொண்டார்.

டெல்லியில் நடக்கும் பாஜக செயற்குழுக் கூட்டத்தை ஒட்டி பிரதமர் மோடியின் முக்கியத் திட்டங்கள் பற்றிய கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பாஜக பொதுச்செயலாளர் வினோத் தவாடே தெரிவித்துள்ளார்.

click me!