ஜார்க்கண்டில் படுதோல்வியை சந்திக்கும் பாஜக..! 5வது மாநிலமாக ஆட்சியை இழக்கிறது..!

By Manikandan S R SFirst Published Dec 23, 2019, 5:35 PM IST
Highlights

ஆளும் பாஜக அரசு ஜார்க்கண்டில் படுதோல்வியை சந்தித்துள்ளது.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு 5 கட்டங்களாக அண்மையில் தேர்தல் நடைபெற்றது. முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையிலான பாஜக அனைத்து இடங்களிலும் போட்டியிட்டது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ்-ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஜார்க்கண்ட் தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆரம்பம் முதலே காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இடையில் பாஜக 33 இடங்களில் முன்னிலை பெற்று இழுபறி ஏற்படும் நிலை வந்தது. பின் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றியை நோக்கி சென்றது தற்போது காங்கிரஸ் கூட்டணி 46 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பி.ஜே.பி 27 இடங்களிலும் ஜே.வி.பி 3 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. பிற கட்சிகள் 7 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் இருக்கிறது.

ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தனிப்பெரும் கட்சியாக 29 இடங்களில் வெற்றி வாய்ப்பை நெருங்கி இருக்கிறது. அதன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் 13 இடங்களிலும் ஆர்.ஜே.டி 5 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. ஆளும் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. அக்கட்சியின் தற்போதைய முதல்வர் ரகுபர் தாஸ் ஜாம்சேத்புர் தொகுதியில் பின்தங்கியுள்ளார். ஜார்க்கண்ட் தேர்தலின் முடிவுகள் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய அரசுக்கு ஜார்க்கண்ட் முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஹேமந்த் சோரன் முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார்.

click me!