ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடியை சகுனம் என்று கூறிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு பிரதமர் மோடி என்ற கெட்ட சகுனம் தான் காரணம் என்று கூறியற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி (BJP) புதன்கிழமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
செவ்வாயன்று ராஜஸ்தானின் ஜலோரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கெட்ட சகுனம் என்று குறிப்பிட்டுப் பேசியது சர்ச்சையாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை தோல்வியடையச் செய்தது மோடி என்ற கெட்ட சகுனம்தான் என்று அவர் கூறியிருக்கிறார் என பாஜக கூறுகிறது.
"நமது வீரர்கள் உலகக் கோப்பையை வென்றிருப்பார்கள். ஆனால் 'கெட்ட சகுனம்' அவர்களைத் தோற்கடித்துவிட்டது" என ராகுல் காந்தி பேசியுள்ளார்.
அகமதாபாத் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியைப் பார்க்க பிரதமர் மோடி நேரில் சென்றிருந்தார். போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்ததை அடுத்து பிரதமர் மோடி நேரில் சென்று மேட்ச் பார்த்த காட்சிகள் இணையத்தில் டிரெண்டாகி உள்ளன.
இந்நிலையில், ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலளித்துள்ள பாஜக, அவரது பேச்சு அவமானகரமானது என்றும் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ராகுல் காந்தியின் பேச்சு அவரது விரக்தி மற்றும் மன உறுதியின்மையின் அடையாளம் என்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் ராகுல் காந்தியின் பேச்சு வெட்கக்கேடானது, கண்டனத்துக்குரியது மற்றும் அவமானகரமானது என்று சொல்கிறார்.
இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர்களான கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் ராகுல் காந்திக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர்.