
பெங்களூர்: கர்நாடகாவில் பெங்களூர் விஜயநகர் ஹம்பி நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தல் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது.
ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் மரணம் அடைந்துவிட்டதால், அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 10,000 வாக்காளர் அடையாள அட்டை ஒரே வீட்டில் இருந்து எடுக்கப்பட்டதால், ராஜ ராஜேஸ்வரி தொகுதி தேர்தலும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒருமணி வரை 40 சதவிகித ஓட்டுகள் பதிவாகி இருக்கிறது. இந்த நிலையில் பெங்களூர் விஜயநகர் ஹம்பி நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு இருக்கிறது. இரண்டு கட்சியினர் அங்கே அதிக அளவில் கூடியதால், ஏற்பட்ட மோதல் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
மோதலில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இரு கட்சியினரின் மோதல் காரணமாக அங்கே அதிக அளவில் போலீஸ் வந்து நிலமையை உடனே கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த மோதலில் ஈடுபட்ட சிலரை போலீஸ் கைது செய்து விசாரித்து வருகிறது. இதனால் அங்கு சிலநிமிடங்கள் பரபரப்பு நிலவியது.