பாஜக வேட்பாளர் பட்டியலில் அத்தனை பேரும் புதுமுகமா... மூத்த தலைவர்களுக்கு ஷாக்!

By SG BalanFirst Published Feb 12, 2024, 10:44 AM IST
Highlights

பாஜக முதல் கட்டமாக 14 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. உத்தராகண்ட் மாநில பாஜக தலைவர் சுதான்ஷு திரிவேதி தவிர 13 வேட்பாளர்களும் புதுமுகங்கள்.

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 14 வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ள நிலையில் மூத்த தலைவர்கள் பலர் தாங்கள் ஓரங்கட்டப்பட்டதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

15 மாநிலங்களில் உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் இந்த மாதம் முடிவுக்கு வருகிறது. இதனை முன்னிட்டு வரும் 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 15ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாஜக முதல் கட்டமாக 14 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், உத்தராகண்டில் இருந்து தேர்வான பாஜக தலைமை செய்தித்தொடர்பாளர் அனில் பலுனி ஆகியோருக்கு பதவிக்காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் சுஷீல் குமார் மோடியும் கழற்றிவிடப்பட்டுள்ளார். இதனால் மற்றொரு வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருந்த மூத்த தலைவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் இந்தப் பட்டியலில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு மக்களவைத் தேர்தலில்  சீட் கொடுக்கப்படும் என உத்தரவாதம் கொடுக்கப்பட்டிருக்கிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை, மொரீஷியஸ் நாடுகளில் இன்று முதல் UPI சேவை அறிமுகம்!

இந்த வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே மூத்த தலைவர் உத்தராகண்ட் மாநில பாஜக தலைவர் சுதான்ஷு திரிவேதி மட்டுமே. மீதமுள்ள 13 வேட்பாளர்களும் புதுமுகங்கள். காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆா்.பி.என்.சிங்குக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, புருஷோத்தம் ரூபாலா, தர்மேந்திர பிரதான், எல்.முருகன் ஆகியோரின் பதவிக்காலமும் இந்த மாதம் நிறைவடைகிறது. இந்நிலையில், மீது உள்ள குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாநிலங்களவை இடங்களுக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது எனக் கூறப்படுகிறது.

ஹிமாசலப் பிரதேசத்தில் இருந்து எம்.பி. ஆன பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலமும் முடிய உள்ளது. இப்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் அந்த மாநிலத்தில் பாஜகவுக்கு போதிய எம்எல்ஏக்கள் பலம் இல்லாததால் நட்டா வேறு மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.

பீகாரில் 6 மாநிலங்களவை எம்.பி. இடங்கள் காலியாக உள்ளன. அந்த மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணிக்கு 3 இடங்களும், எதிர்க்கட்சி கூட்டணிக்கு 3 இடங்களும் கிடைக்கும் எனத் தெரிகிறது. முதல் பட்டியலில் பீகார் மாநிலத்திற்கு தர்மசீலா குப்தா, பீம் சிங் ஆகிய இரண்டு வேட்பாளர்கள் பெயர் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஒரு இடம் வழங்கப்படும் என்றும் தனது வேட்பாளர் பெயரை ஐக்கிய ஜனதா தளம் கட்சியே அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.

தாயிடம் பிச்சை கேட்டு வந்த சன்னியாசி ஒரு பிராடு! வசமாக சிக்கிய பணம் பறிக்கும் கும்பல்!

click me!