மோப்ப நாய்க்கு பிறந்த நாள்...  கேக் வெட்டி கொண்டாடிய வனத் துறையினர்!!

By sathish kFirst Published Jan 28, 2019, 1:34 PM IST
Highlights

முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்க்கப்படும் மோப்ப நாயின் பிறந்தநாளைத் தமிழக வனத் துறையினர் கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆபர் என்ற மோப்ப நாய் பணியில் சேர்ந்தது. "பெல்ஜியம் ஷெப்பெர்ட்" வகையைச் சேர்ந்த இந்த மோப்ப நாய் முதுமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிகழும் வனம் தொடர்பான குற்றங்களைக் கண்டுபிடிக்கவும், புலி உள்ளிட்ட வனவிலங்குகள் பதுங்கியிருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுக்கவும் உதவி செய்து வருகிறது.

இந்நிலையில், நேற்று ஆபரின் நான்காவது பிறந்தநாள் கேக் வெட்டி  கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு வனத் துறையினர் தங்களது குடும்பத்துடன் ஆபரின் பிறந்தநாளை கேக் வெட்டி மகிழ்ச்சியோடு கொண்டாடினர். கேக்கை மோப்ப நாய்க்கு ஊட்டி மகிழ்ந்தனர்.

பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றி வன ஊழியர்கள்  கூறுகையில், “மோப்ப நாய் ஆபர் வனம் சார்ந்த குற்றங்களில் ஈடுபடுபவர்களைப் பிடிப்பதில், எங்களுக்குப் பெரிதும் உதவி வருகிறது. இதனால் குற்றவாளிகள் பலர் கைது செய்யப்பட்டனர். இதன் பிறந்த நாளை, கேக்வெட்டி கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்' என்று தெரிவித்தனர்.

சத்தியமங்கலம் வனப் பகுதியில் புலித்தோல் பதுக்கி வைத்திருந்த இடத்தைக் கண்டுபிடித்தது, அதேபோல கூடலூரில் காணாமல் போன யானை தந்தத்தை மைசூரில் கண்டுபிடித்து கொடுத்தது. மசினகுடி வனப் பகுதியில் மாயமான மனவளர்ச்சி குன்றிய நபரைக் கண்டறிந்தது உள்ளிட்ட பல சம்பவங்களில் ஆபர் மோப்ப நாய் வனத் துறையினருக்கு உதவியாக இருந்துள்ளது.

click me!