
பீகார் மாநிலத்தில் பெண் ஒருவர் பிச்சை எடுத்து தனது வீட்டிற்கு கழிப்பறை கட்டியுள்ளதற்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
சூபால் மாவட்டத்தில் உள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமம் பாத்ரா உத்தார். இக்கிராமத்தைச் சேர்ந்த வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள பெண் அமினா கதூன்.
இவர் வீட்டில் ஒரு கழிப்பறை கட்டிக்கொள்வதற்காக அதற்கான நிதியுதவி கேட்டு வட்டார அதிகாரிகளை நாடியுள்ளார். ஆனால் அதிகாரிகள் அதற்கு ஒத்துழைக்காமல் இழுக்கடித்து வந்துள்ளனர்.
இதனால் தான் பிச்சை எடுத்தாவது ஒரு கழிவறையை கட்டிவிட வேண்டும் என சபதம் எடுத்துள்ளார் அமினா. இந்நிலையில், அக்கம்பக்கத்து கிராமங்களுக்குச் சென்று தனது வீட்டுக்கான கழிப்பறை கட்டுவதற்காக பிச்சை எடுத்துள்ளார்.
அந்த பணத்தை வைத்து கழிவறையை கட்டவும் சென்றார். இதற்காக சூபால் மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அமினா தனது வீட்டுக்கு கழிவறை கட்டும் பணியில் ஈடுபட்ட கொத்தனார் மற்றும் சித்தாள் ஆகிய இருவரும் தங்கள் ஊதியத்தை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டதாக தெரிவித்து கவுரவப்படுத்தினார்.