மகாராஷ்டிராவில் நடந்தது போல் பீகாரில் ஆட்சியை கவிழ்க்க நடந்த சதியை முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் எப்படி முறியடித்தார் என்பதுதான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பர பரப்பாக பேசப்படுகிறது. உடன் இருந்த ஆர்சிபி சிங்கை எப்படி நிதிஷ் குமார் கண்டறிந்தார் வெளியேற்றினார் என்பது ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் எளிதில் சிவ சேனா ஆட்சியைக் கவிழ்த்து, சிவ சேனாவில் இருந்து பிரிந்து வந்த அணியுடன் இணைந்து பாஜக ஆட்சி அமைத்தது. ஆனால், பாஜகவின் இந்த தந்திரம் பீகாரில் எடுபடவில்லை. அரசியலில் பழுத்த தந்திரவாதியான நிதிஷ் குமாரிடம் இது பலிக்கவில்லை. நிதிஷ் குமார் விழித்துக் கொண்டதால் அவரது கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவ சேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரவுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் நம்பிக்கையாக இருந்தவர்தான் ஏக்நாத் ஷிண்டே. உத்தவ் தாக்கரே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது பாஜக தனது காயை நகர்த்தியது. சிவ சேனாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில், ஒரு அணி உருவாக்கப்பட்டது. பின்னர் இந்த அணி, பாஜகவுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை அமைத்தது.
ஆனால், இதே தந்திரத்தைப் பயன்படுத்தி பீகாரில் ஆட்சியைப் பிடிக்க பாஜக திட்டமிட்டு இருந்தது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்த மூத்த தலைவர் ஆர்சிபி சிங்கை தங்களது பக்கம் இழுப்பதற்கு பாஜக முயற்சித்தது. இதை உற்று நோக்கி கவனித்து வந்த நிதிஷ்குமார் உடனடியாக செயல்பட்டு களத்தில் இறங்கினார். மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு நெருக்கமானவர் ஆர்சிபி சிங்.
இதுகுறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர்களில் ஒருவரான ராஜீவ் ரஞ்சன் சிங் கூறுகையில், நிதிஷ் குமார் மீது சமீபத்தில் இரண்டு முறை சதி வேலைகளை பாஜக திட்டமிட்டு இருந்தது. அதில் ஒன்று கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், சிராக் பஸ்வானை களத்தில் எங்களுக்கு எதிராக இறக்கினர். இதனால், ஐக்கிய ஜனதா தளம் வெறும் 43 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. தற்போது நிதிஷ் குமாருக்கு எதிரான சதி முளையிலேயே கில்லி எறியப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
பீகாரில் நிதிஷ் குமாருக்கு நெருக்கமாக இருந்தவர்தான் ஆர்சிபி சிங். இவரது நடவடிக்கைகளில் மாற்றங்கள் தெரிவதை நிதிஷ் குமார் மோப்பம் பிடித்துள்ளார். உடனடியாக அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. நில ஊழல் வழக்கு தொடர்பான கேள்விகளை ஐக்கிய ஜனதா தளம் எழுப்பியது. இதில் ஆர்பிசி சிங் ஆடிப் போய்விட்டார். உடனடியாக கட்சியில் இருந்து விலகினார்.
கடந்த 2013 - 2022 ஆம் ஆண்டு கால கட்டங்களில் 47 பிளாட்டுகளை ஆர்சிபி சிங் வாங்கி இருப்பதாகவும், இதில் ஊழல் நடந்து இருப்பதாகவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பீகார் தலைவர் உமேஷ் குஷ்வாலா விளக்கம் கேட்டு கடிதம் எழுதினார். இதில் ஆடிப் போன சிங், தனது குடும்பத்தின் மீது பழி சுமத்துகின்றனர் என்று கூறி, இதற்கு பழி வாங்குவேன் என்றும், பாஜகவில் சேர இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். மேலும், நிதிஷ் குமாரால் ஒரு நாளும் பிரதமர் ஆக முடியாது. பொறாமைக்கு மருந்து இல்லை என்று தாக்கிப் பேசி இருந்தார்.
தொடர்ந்து பாஜகவுடன் பயணம் செய்ய முடியாது என்று நிதிஷ் குமாரும் நேரம் பார்த்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. கட்சி தாவலில் பெயர் பெற்ற நிதிஷ் குமார் பழுத்த அரசியல்வாதி. ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவுடன் பலமுறை மோதலில் ஈடுபட்டுள்ளார். நிதிஷ் குமாரின் பலமே யாரையும் நம்பாமல் அவர் எடுக்கும் முடிவுகளில் உறுதியாக இருப்பதுதான்.
நிதிஷ் குமாருக்கும், ஆர்சிபி சிங்கிற்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே புகைச்சல் இருந்து வந்தது. 2019ஆம் ஆண்டில் மத்தியில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதில் ஒன்று சிங்கிற்கும், மற்றொன்று லாலன் சிங்கிற்கும் வழங்குவதற்கு கட்சி முதலில் முடிவு செய்தது. பின்னர், அமைச்சரவையில் சேருவதில்லை என்று நிதிஷ் குமார் முடிவு செய்தார். இது சிங்கிற்கு ஏமாற்றம் அளித்தது.
மீண்டும் பீகார் முதல்வராக பதவியேற்கிறார் நிதிஷ்குமார்... துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பதவியேற்பு!!
ஆனாலும் அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, சிங்கிற்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது. அதாவது, மத்திய ஸ்டீல் துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது. நிதிஷ் குமாரை கலந்து பேசாமல் இந்தப் பொறுப்பு சிங்கிற்கு வழங்கப்பட்டதால், நிதிஷ்குமார் கோபத்தின் உச்சத்தில் இருந்தார். இந்த நிலையில்தான் ராஜ்ய சபாவில் எம்பி பதவி காலியானது. அந்த இடத்திற்கு சிங்கை மூன்றாவது முறை நியமிக்காமல், கீரு மகோத்தோவை ராஜ்ய சபாவுக்கு நியமித்தார். இதனால், மத்திய அமைச்சரவை பதவியில் நீடிக்க முடியாமல் சிங் தனது பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து, பின்னர் நிதிஷ் குமாருக்கு நெருக்கமாகி அரசியலுக்கு வந்தவர் ஆர்சிபி சிங். ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்த பின்னர் தன்னை கட்சியில் பெரிய அளவில் வளர்த்துக் கொண்டார். விரைவில் நிதிஷ் குமாருக்கு அடுத்து இரண்டாவது இடத்திற்கு தான்தான் என்ற இடத்தை எட்டிப் பிடித்தார். அதே வேகத்தில் நிதிஷ் குமாரின் நம்பிக்கையில் இருந்து விலகி இன்று கட்சியிலும் இருந்து வெளியேறிவிட்டார் ஆர்சிபி சிங்.