
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025 அதன் தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளது. மாநிலத்தின் 243 தொகுதிகளிலும் மக்கள் வாக்களித்துவிட்ட நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தேஜஸ்வி யாதவ் ஆட்சி நாற்காலியை அடைவாரா அல்லது நிதிஷ் குமார் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பாரா என்பது இன்று தெரிந்துவிடும்.
மாநிலம் முழுவதும் 46 வாக்கு எண்ணும் மையங்களில் 2600க்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் தலைவிதி இன்று தீர்மானிக்கப்படும். வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் மத்திய துணை ராணுவப் படைகளும் (CISF, CRPF), இரண்டாவது அடுக்கில் பீகார் சிறப்பு ஆயுதப் படையும், மூன்றாவது அடுக்கில் மாவட்ட காவல் படையும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும். அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளும் 24 மணி நேரமும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகின்றன. அனைத்து வேட்பாளர்களுக்கும் நேரடி சிசிடிவி காட்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டத்தில் 67.13% வாக்குகள் பதிவாகியிருந்தன. இது பீகார் தேர்தல் வரலாற்றில் மிக உயர்ந்த சாதனையாகும்.
11 வெவ்வேறு கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் தங்கள் முடிவுகளை வெளியிட்டுள்ளன, அவற்றில் 10 நிறுவனங்கள் NDA கூட்டணி பெரும்பான்மையை நோக்கி செல்வதாகக் கணித்துள்ளன. Axis My India கருத்துக்கணிப்பின்படி, NDA கூட்டணிக்கு 121-141 இடங்களும், மகாபந்தன் கூட்டணிக்கு 98-118 இடங்களும் கிடைக்கலாம். சுவாரஸ்யமாக, 34% மக்கள் முதல்வர் பதவிக்கு தேஜஸ்வி யாதவை தங்கள் முதல் தேர்வாகக் கூறியுள்ளனர். வாக்கு சதவீதத்தின் அடிப்படையில், NDA-க்கு 43% வாக்குகளும், மகாபந்தனுக்கு 41% வாக்குகளும் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜன் சுராஜ் கட்சிக்கு சுமார் 4% வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது, ஆனால் இடங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.
காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படுகிறது. 30 நிமிடங்களுக்குப் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். மொத்தம் 4,372 மேசைகளில் சுமார் 5 கோடி வாக்குகள் எண்ணப்படும். அனைத்து மையங்களிலும் வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் இருப்பார்கள்.