டெல்லி இந்தியா கூட்டணி கூட்டம்: புறக்கணிக்கும் நிதிஷ்குமார்!

By Manikanda PrabuFirst Published Dec 5, 2023, 12:01 PM IST
Highlights

டெல்லியில் நடைபெறவுள்ள இந்தியா கூட்டணி கூட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் புறக்கணிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் ஜூலை மாதம் பெங்களூருவிலும், மூன்றாவது கூட்டம் செப்டம்பர் மாதம் மும்பையிலும் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக, இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் வருகிற 6ஆம் தேதி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு அழைப்பு விடுத்து கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

Latest Videos

இந்த நிலையில், டெல்லியில் நடைபெறவுள்ள இந்தியா கூட்டணி கூட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் புறக்கணிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதிஷ்குமார் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரை மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். இதனால், அவரால் டெல்லி கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என ஐக்கிய ஜனதாதளம் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. வைரஸ் காய்ச்சலால் கடந்த சில நாட்களாகவே நிதிஷ்குமார் எந்தவொரு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை.

அவருக்கு பதிலாக, அக்கட்சியின் தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் என்ற லாலன் சிங் மற்றும் மாநில நீர்வளத்துறை அமைச்சர் சஞ்சய் குமார் ஜா உள்ளிட்ட இரண்டு மூத்த தலைவர்கள் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர். மக்களவை தேர்தலுக்கு இன்னும் 4 -  5 மாதங்களே உள்ள நிலையில், இந்த அறிவிப்பு கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Floods : 4 அடி உயரத்திற்கு மழை நீர்.. கோயம்பேடு - வடபழனி இடையே போக்குவரத்து தடை..!

மொத்தம் 28 கட்சிகளை கொண்ட இந்தியா கூட்டணியின் மும்பை கூட்டத்தில், கூட்டணியின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. இதுதவிர, பிரசாரம், சமூக ஊடக குழுக்கள் என மொத்தம் 4 குழுக்களும் அமைக்கப்பட்டன.

இதையடுத்து, இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் இல்லத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், தொகுதி பங்கீடு, பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்துவது, பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் டெல்லி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தேர்தல் முடிவுகள், எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

click me!