பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்: நிதிஷ் அரசின் தில்லான திட்டம்

By SG BalanFirst Published Jan 7, 2023, 11:31 AM IST
Highlights

நாட்டிலேயே முதல் முறையாக பீகார் மாநிலத்தில் சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பை இன்று தொடங்குகிறது.

இந்தியாவில் முதல் முறையாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பை சாதிவாரியாக நடத்த பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார் அரசு முடிவு செய்துள்ளது. இந்த சாதிவாரி கணக்கெடுப்புக்கு முழுமையாகத் தயார் நிலையில் உள்ளதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இதன்படி பீகார் இந்தக் கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. மாநிலத்தின் 38 மாவட்டங்களிலும் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்தக் கணக்கெடுப்பின் முதல் கட்டப் பணிகள் ஜனவரி 21ஆம் தேதியுடன் முடியும். இதில் மாநிலத்தில் உள்ள குடும்பங்கள் மட்டும் கணக்கிடப்படும்.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட கணக்கெடுப்புப் பணிகள் ஏப்ரல் 1 முதல் 30 வரை நடக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில், அனைத்து சாதிகள், உட்பிரிவுகள், சமூக பொருளாதார நிலை ஆகியவைக் கணக்கிடப்படும்.

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பீகார் துணை முதல்வர் தேஜாஸ்வி யாதவ், “சாதிவாரி கணக்கெடுப்பு பீகாரில் இன்று தொடங்குகிறது. ஏழை மக்களுக்கு எதிரான பாஜக இது நடத்தப்படுவதை விரும்பவில்லை. இந்தக் கணக்கெடுப்பின் மூலம் பெறப்படும் அறிவியல்பூர்வமான தரவுகள் பட்ஜெட் தயாரிக்கவும் சமூகநலத் திட்டங்களைச் தகுந்த முறையில் செயல்படுத்தவும் உதவும்.” என்றார்.

| Caste-based survey will start in Bihar from today. It will give us scientific data so that budget and social welfare schemes can be made accordingly. BJP is anti-poor. They don't want this to happen: Bihar Deputy CM Tejashwi Yadav pic.twitter.com/DjlQu9cSSF

— ANI (@ANI)

Joshimath: அழிவின் விளிம்பில் உத்தரகாண்ட் ஜோஷிமத்! கர்னபிரயாகிலும் 50 வீடுகளில் விரிசலால் மக்கள் பீதி

கடந்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பீகார் அமைச்சரவை முடிவு செய்தது. மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வாயப்பில்லை என்று கூறிவந்த நிலையில் பீகார் அரசு இந்த முடிவை துணிச்சலாக அறிவித்தது.

பீகாரின் மக்கள்தொகை சுமார் 12.7 கோடி. இதில் 2.58 கோடி குடும்பங்கள் உள்ளன. 38 மாவட்டங்களிலும் 534 பிளாக்குகள், 261 உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. முழுமையாக கணக்கெடுப்பு முடிவதற்கு மே மாதம் வரை ஆகலாம் என்று சொல்லப்படுகிறது.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார்  அம்மாநில அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து ஆய்வு செய்வதற்காக ‘சமாதான் யாத்திரை’ என்ற பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். இந்தப் பயணம் ஜனவரி 5ஆம் தேதி மேற்கு சம்பரானில் ஆரம்பமானது. வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது, “பீகார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளித்துள்ளது. எதிர்காலத்தில் அரசுத் திட்டங்களை வடிவமைக்க இந்தக் கணக்கெடுப்பு உதவும்” என்று தெரிவித்தார்.

“விரிவான தரவுகளைப் பெறும் வகையில் அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்துள்ளோம். மாநில அரசுக்கு மட்டுமின்றி நாட்டுக்கே இந்தக் கணக்கெடுப்பு பயன்படும்” என்றும் நிதிஷ் குமார் கூறினார்.

Amazon Layoff in India:இந்தியாவில் 1,000 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க அமேசான் முடிவு?

click me!