
பிரதமர் மோடி 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவரது இந்த பயணத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் வலுப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், இந்தியா - அமெரிக்கா இடையே ஜெட் எஞ்ஜின்களை ஒன்றாக தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூயார்க்கை தலைமையிடமாக கொண்ட பன்னாட்டு நிறுவனமான ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் GE-F414 ஜெட் எஞ்சினை இந்தியா அதிக அளவில் வாங்க முனைப்பு காட்டி வருகிறது.
இந்தியா - அமெரிக்கா இடையே வரலாறு காணாத நம்பிக்கை: பிரதமர் மோடி!
அத்துடன், இந்தியாவில் ஜெட் என்ஜின்களை தயாரிக்கவும் இந்தியா முயற்சித்து வருகிறது. இதற்காக, அமெரிக்காவிலிருந்து ஜெட் என்ஜின்கள் தொடர்பான சிறப்பு தொழில்நுட்பம் இந்தியாவுக்கு வர வேண்டும். ஜெட் என்ஜின்களை தயாரிப்பதில் அமெரிக்காவுக்கு நிபுணத்துவம் உள்ளது, ஆனால் அது அதன் தொழில்நுட்பத்தை வேறு எந்த நாட்டிற்கும் இதுவரை அது கொடுக்கவில்லை. எனவே, ஜெட் என்ஜின் தொடர்பான தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கும் பட்சத்தில், அது இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறைக்கு ஒரு மைல் கல்லாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதன் மூலம், இந்தியா தனது எதிர்கால போர் விமானங்களுக்கான சிறந்த இயந்திரத்தை சொந்தமாக உருவாக்க முடியும். ஜெட் எஞ்சின் தொடர்பாக அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டால், ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் தனது GE-F414 இன்ஜினை இந்தியாவில் தயாரிக்க முடியும். இதற்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்படும்.
காவேரி என்ற ஜெட் எஞ்சின் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது எதிர்பார்த்த வெற்றியை இன்னும் அடையவில்லை. இந்த நிலையில், இந்த ஒப்பந்தம் ஏற்பட்டால் ஜெட் என்ஜின் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் வாய்ந்த அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ரஷ்யா போன்ற உலகின் சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர வாய்ப்புள்ளது.
தேஜாஸில் GE-F414 இன்ஜின்
ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் அதிநவீன ஜெட் எஞ்ஜின், அமெரிக்க போர் விமானமான F/A-18 ஹார்னெட்டில் பயன்படுத்தப்படுகிறது. இந்த விமானம் அமெரிக்க கடற்படையால் பயன்படுத்தப்படுகிறது. இந்திய கடற்படைக்கும் F/A-18 சூப்பர் ஹார்னெட் போர் விமானத்தை வாங்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. இந்த ஒப்பந்தத்திற்கான போட்டியில் பிரான்சின் ரபேல் எம் விமானமும் உள்ளது. ஆனால், இந்தியா அதன் உள்நாட்டு போர் விமானமான தேஜாஸின் அடுத்த பதிப்பான தேஜாஸ் மார்க் II (LCA-Mark2) இல் GE-F414 இன்ஜினை நிறுவ விரும்புவதாக தெரிகிறது. ஒப்பந்த மதிப்பில் 80 சதவீதம் வரை முக்கிய தொழில்நுட்பத்தை மாற்ற அமெரிக்கா தயாராக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த ஒப்பந்தம் நடந்தால், ஹெச்ஏஎல் உடன் இணைந்து ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் தனது தொழிற்சாலையை இந்தியாவில் அமைக்கும் என கூறப்படுகிறது.
ஜெட் எஞ்சின் ஒப்பந்தத்தால் பயனடையும் விமானப்படை
இந்த ஒப்பந்தம் மூலம் விமானப்படைக்கு நம்பகமான மற்றும் நீண்ட கால ஜெட் எஞ்சின் கிடைக்கும் என்பதால் விமானப்படை பலனடைய வாய்ப்புள்ளது. தற்போது இந்திய விமானப்படையின் பெரும்பாலான விமானங்கள் ரஷ்ய விமானங்கள். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து வரும் என்ஜின்களைக் காட்டிலும் ரஷ்ய இயந்திரங்கள் குறைவான நம்பகத்தன்மை உடையவையாக அறியப்படுகிறது. அவற்றுக்கு அதிக பராமரிப்பு தேவைப்படுகிறது. சில நூறு விமானப் பயண நேரத்துக்கு பின்னர் ரஷ்ய இயந்திரங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆனால், நிபுணர்களின் கூற்றுப்படி, ஜெனரல் எலக்ட்ரிக் இயந்திரம் ரஷ்ய இயந்திரத்தை விட இலகுவானது, அதிக சக்தி வாய்ந்தது மற்றும் எரிபொருள் திறன் கொண்டது. இதனை எதிர்கால பயன்பாட்டிற்கு ஏற்ப மேம்படுத்தவும் முடியும்.