
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் சதிஷ். இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவராகவும் இருக்கும் இவர் அரிய வகை நாய்களை வாங்கி வளர்ப்பதில் ஆர்வம் உள்ளவர். அவற்றை இனப்பெருக்கம் செய்ய வைத்து குட்டிகளை விற்பனையும் செய்துவருகிறார்.
இவர் அண்மையில் ‘காகேசியன் ஷெப்பர்ட்’ இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்றை 20 கோடி ரூபாய் விலைக்கு வாங்கி உள்ளார். அபூர்வ நாய் இனமான இது ஜார்ஜியா, துருக்கி, ரஷ்யா, தஜேஸ்தான், அஜர்பைஜான், சிர்காசியா, போன்ற நாடுகளில் மட்டுமே இருக்கும்.
காகேசியன் ஷெப்பர்ட் இன நாய்கள் 10 - 12 ஆண்டுகள் வாழும். சராசரியாக 23 - 30 அங்குல உயரத்துக்கு வளரும். அவற்றின் எடை 45 - 77 கிலோ இருக்கும். ஓநாய்களை வேட்டையாடும் அளவுக்குத் திறன் மிக்கவை.
ஹைதாராபாத்தில் உள்ள இதற்கு முன் இந்த நாயை வளர்த்துள்ளார். அதனை விற்க விரும்பிய அவர், சதிஷ் பற்றி அறிந்து அவரைத் தொடர்பு கொண்டிருக்கிறார். ஒன்றரை வயதான ‘காகேசியன் ஷெப்பர்ட்’ நாயை சதீஷ் தாராள மனதுடன் ரூ.20 கோடி கொடுத்து வாங்கிவிட்டார்.
நாய்களுக்கான போட்டிகளில் 32 முறை விருதுகள் வென்றிருக்கும் இந்த நாய்க்கு ‘கடபோம் ஹைடர்’ என்று செல்லமாகப் பெயர் வைத்துள்ளார். இந்த நாய்க்காக வீட்டில் தனி அறையையே கொடுத்திருக்கிறார்.
2016ஆம் ஆண்டு கொரியாவிலிருந்து இரண்டு நாய்களை தலா ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கி, அவற்றை விமான நிலையத்திலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரில் அழைத்துச் சென்றுள்ளார். இந்தியாவில் இந்தக் கொரிய நாய்களை வாங்கிய முதல் நபர் சதீஷ்தான்.