
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இடையில் சூரத்தில் நிறுத்தப்பட்டது. பயணிகள் படிக்கட்டுடன் கூடிய டிரக் விமானத்தின் மீது மோதியதில் இறக்கைகளில் ஒன்று சேதம் அடைந்தது.
டெல்லியில் இருந்து இரவு 9 மணியளவில் வந்திறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வாயிலை நோக்கிச் சென்ற பயணிகள் படிக்கட்டு டிரக்குடன் மோதியது. இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் திடீரென லேசான அதிர்ச்சியை உணர்ந்தனர் என சூரத் விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.
177 பயணிகளுடன் சூரத் வந்த விமானத்தில் 131 பயணிகள் சூரத் விமான நிலையத்தில் இறங்கினர். 46 க்கும் மேற்பட்ட பயணிகள் பெங்களூரு செல்வதற்காகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்கள் சூரத்தில் இரவு ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த சிறிய விபத்தில் பயணிகளில் யாருக்கும் எதுவும் காயம் ஏற்படவில்லை எனவும் விமான நிலைய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் எஞ்சினியர்கள் டிரக்குடன் மோதிய விமான இறக்கையை பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சூரத்தில் இருந்து விமானத்தில் ஏற வேண்டிய பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் அடுத்த உத்தரவு வரும் வரை காத்திருக்குமாறு கூறியுள்ளனர்.
சூரத் விமான நிலைய இயக்குனர் எஸ்.சி பால்சே கூறுகையில், “ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் டெல்லி - சூரத் - பெங்களூர் விமானத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. பின்னால் வந்த ட்ரக் பின்பக்க இறக்கையில் மோதியுள்ளது. சனிக்கிழமை பழுதபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.