
சிலிக்கான் சிட்டி எனப்படும் பெங்களூருவில், மத்திய அரசு வரித்துறை அதிகாரிகள் எனக் கூறி நாடகமாடிய மர்ம நபர்கள், ஏ.டி.எம்-களில் பணம் நிரப்பும் வேனை மறித்து, கண்ணிமைக்கும் நேரத்தில் சுமார் 7 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் தற்போது துப்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து கர்நாடகா உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: கொள்ளை பற்றி தகவல் கிடைத்துள்ளது. இதற்கு மூல காரணம் யார்? ஏடிஎம்-க்கு பணம் கொண்டு வந்து நிரப்பும் தகவலை கொடுத்தது யார்? பணம் நிரப்புபவர்களில் யாராவது சம்பந்தப்பட்டிருக்கிறார்களா இல்லையா என்பது தெரியவில்லை. இப்போதுதான் துப்பு கிடைத்துள்ளது. இந்த வழக்கை நாங்கள் தீவிரமாக எடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
அவர்கள் வந்த காரிலேயே பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். சில தகவல்கள் கிடைத்துள்ளன, அனைத்தையும் இப்போது கூற முடியாது. எல்லா தகவல்களையும் பகிர்ந்துகொள்ள இயலாது. நிச்சயமாக அவர்களைப் பிடித்துவிடுவோம். வாகன எண் உள்ளிட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. பெங்களூருவில் இதுபோன்ற சம்பவம் பட்டப்பகலில் நடந்ததில்லை. ஏழு கோடிக்கும் அதிகமான தொகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நபர்களா? வெளி மாநிலத்தவர்களா? என்பது விரைவில் தெரியவரும். பாஜகவின் குற்றச்சாட்டு குறித்து நீங்கள் அவர்களிடம் தான் கேட்க வேண்டும். ஆனால், திருடர்களை நாங்கள் பிடித்துவிடுவோம் என்று பரமேஸ்வர் கூறியுள்ளார்.