
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் வங்கி ஊழியர்கள் நாளை முதல் 2 நாட்கள் (மே 30 மற்றும் 31) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் வங்கிப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பொது மக்கள் இன்றைய தினமே தங்களுக்குத் தேவையான பணத்தை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர்களுக்கு 2 சதவீத ஊதிய உயர்வு வழங்க வங்கிகள் சம்மேளனம் முன்வந்தது. ஆனால் அதை ஊழியர் சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஊதிய உயர்வை உயர்த்தி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்த கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் மே 30-ந்தேதி (நாளை) 31-ந்தேதி ஆகிய 2 நாட்கள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்து இருந்தன.
இதைத்தொடர்ந்து நேற்று டெல்லி தொழிலாளர் நல அமைச்சகத்தில் மத்திய அரசின் தலைமை தொழிலாளர் நல கமிஷனர் ஏ.கே.நாயக் தலைமையில் வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், வங்கிகள் சம்மேளன அதிகாரிகளும், மத்திய நிதித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம், தேசிய வங்கி ஊழியர்கள் சங்க தலைவர் எஸ்.சி.பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம், வங்கிகள் அனைத்தும் அதிக லாபம் ஈட்டுகின்றன. ஆனால் வராக்கடன்களை காரணம் காட்டி வங்கிகள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறுகிறார்கள். இதன் காரணமாக எங்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை. 2 சதவீத ஊதிய உயர்வு எங்களுக்கு போதாது. ஊதிய உயர்வு தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது என கூறினார்.
இதனால் திட்டமிட்டபடி நாளை (புதன்கிழமை) நாளை மறுதினம் (வியாழக்கிழமை) 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதில், அரசு மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் என 10 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள். இந்தியாவில் பெரிய முதலாளிகள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்போது விவசாயக்கடன், கல்விக்கடன்களை தள்ளுபடி செய்வதில் எந்த பாதிப்பும் வங்கிகளுக்கு ஏற்படாது என வெங்கடாச்சலம் தெரிவித்தார்.