
கேரள மாநிலம், கொல்லத்தில், செல்லாத ரூபாயை நோட்டுக்களை மாற்ற வந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்த மிரண்ட வங்கி அதிகாரிகள் கதவைப் பூட்டியதால், ஆத்திரமடைந்த மக்கள், கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.
நாட்டில் உள்ள கருப்பு பணம், கள்ளநோட்டுக்களை ஒழிக்கும் நோக்கில், பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி ரூ.1000, ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார்.
அடுத்தஒரு நாள் இடைவெளியில் மக்கள் தங்களிடம் இருக்கும் செல்லாத பணத்தை வங்கிகள், தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்தார். அதிலும், நபர் ஒருவர் ரூ. 4 ஆயிரம் மட்டுமே மாற்ற முடியும் என கட்டுப்பாடும் விதித்தார்.
ஏ.டி.எம். மையங்கள் நேற்றுமுதல் செயல்பாட்டுக்கு வந்துவிடும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதிலும் ஏராளமான குளறுபடிகள் காரணமாக 90 சதவீத ஏ.டி.எம்.கள் இயங்காததால், மக்கள் பணத்துக்காக திண்டாடினர்.
வங்கியில் சொந்த கணக்கில் பணம் ஏராளமாக இருந்தும், மக்கள் செலவுக்கு காசு இல்லாமல், சாலையில் நீண்ட வரிசையில் வங்கியின் முன் பணத்துக்காக காத்துக் கிடக்கின்றனர்.
கேரள மாநிலத்தின் பல நகரங்களில் நேற்றும் செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்ற மக்கள் வங்கிகள், தபால்நிலையங்கள் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கொல்லம், வவாக்கம் பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கி திருவாங்கூர் கிளை முன் நேற்று காலை ஏராளமான மக்கள் காத்திருந்தனர். வங்கி கதவு திறக்கப்பட்டதும் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வங்கிக்குள் பணம் பெற நுழைந்தனர். இதைப் பார்த்து வங்கி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், வங்கிக்கு வெளியை நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதைப் பார்த்து மிரண்டனர்.
இதனால், வங்கிக்குள் மேலும் யாரும் நுழையா வகையில் கதவைப் பூட்டினர். இதைப் பார்த்து ஆத்திரமுற்ற மக்கள், வெளியில் நிற்பவர்களை பொருட்படுத்தாமல் கதவைப் பூட்டிய வங்கி அதிகாரிகள் செயல்பாட்டை கண்டு கொதித்தனர். இதனால், ரகளையில் ஈடுபட்டு, வங்கியின் கண்ணாடி கதவுகளை அடித்து நொறுக்கினர்.
அதன்பின், போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து மக்கள் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்து, ரகளையில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.
மூன்றாவதுநாளாக ஏ.டி.எம்.களில் பணம் இல்லை என்று மக்கள் புகார் தெரிவித்தனர். இதனால், வேறுவழியின்றி பணத்துக்காக, வங்கியின் முன் நீண்ட வரிசையில் நின்று, பணம் பெற்றுச் செல்கின்றனர். கேரளாவில் வங்கியில் பணம் பெற வரிசையில் நின்ற 2 பேர் நேற்று உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.