வீட்டில் கொள்ளையர்கள் புகுந்ததால் ஸ்பெயின் நபர் ஒருவர் போலீசுக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் கன்னடத்தில் பேசாததால் போன் இணைப்பை துண்டித்த சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள்
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நகரம் என அழைக்கப்படும் பெங்களூருவில் ஐடி நிறுவனங்கள் நிறைந்துள்ளதால் ஏராளமான வெளிநாட்டவர்கள் அங்கு வசித்து வருகின்றனர். அந்த வகையில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஆலோசகர் 30 வயதான ஜீசஸ் அப்ரியல் என்பவர் லாங்ஃபோர்ட் சாலையில் உள்ள நைடஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் பின் இரவு 2 மணியளவில் இரண்டு கொள்ளையர்கள் குளியலறையில் இருந்து லூவர் ஜன்னல் கண்ணாடிகளை அகற்றிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தனர். இதைப்பார்த்து ஜீசஸ் அப்ரியல் அதிர்ச்சி அடைந்தார். இதனால் பயந்துபோன அவர் கொள்ளையர்கள் கண்ணில் படாத வகையில் ஒரு அறைக்குள் சென்று கதவை உட்பக்கமாக பூட்டிக் கொண்டார்.
போனை துண்டித்த போலீஸ்
இதனைத் தொடர்ந்து அவர் தனது செல்போன் மூலம் போலீஸ் உதவி எண் 122ஐ தொடர்பு கொண்டுள்ளார். வெளிநாட்டவர் என்பதால் கன்னடம் தெரியாததால் அவர் ஆங்கிலத்தில் பேசி உதவி கேட்டுள்ளார். ஆனால் போலீஸ் கட்டுப்பாடு அறையில் இருந்த காவல் அதிகாரி, கன்னடத்தில் பேசும்படி ஜீசஸ் அப்ரியலிடம் கூறியுள்ளார். ஆனால் அவருக்கு கன்னடம் சுத்தமாக தெரியாததால் ஆங்கிலத்திலேயே பேசியுள்ளார்.
ஆனால் போலீஸ் அதிகாரி கன்னடத்தில் பேசும்படி தொடர்ந்து வரை கட்டாயப்படுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அதிகாரி ஜீசஸ் அப்ரியலின் போன் இணைப்பை துண்டித்தார். இதனால் அவர் என்னசெய்வதென்று தெரியாமல் வீட்டின் அறைக்குள்ளேயே பயந்து முடங்கியுள்ளார்.
ரூ.80,000 பொருட்கள் கொள்ளை
இதன்பிறகு 2 மணி நேரத்துக்கும் மேலாக அந்த வீட்டில் சாவகாசமாக சுற்றித்திரிந்த கொள்ளையர்கள் ஒரு லேப்டாப், ஒரு பிளாட்டினம் மோதிரம், ஹெட்ஃபோன்கள், ரூ.10,000 அடங்கிய பர்ஸ், அப்ரியலின் ஸ்பானிஷ் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் டெபிட் கார்டுகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். மொத்தம் ரூ.82,000 மதிப்புள்ள மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.
கொள்ளையர்கள் சென்றபிறகு காலை 8.30 மணி வரை அந்த அறைக்குள்ளேயே இருந்த ஜீசஸ் அப்ரியல் அதன்பிற்கு நடந்த சம்பவங்களை தனது வீட்டின் உரிமையாளர் சுதீப்க்கு தெரிவித்துள்ளார். இதன்பிறகு இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சுதீப்பும், ஜீசஸ் அப்ரியலும் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.
பொதுமக்கள் வேண்டுகோள்
கன்னடத்தில் பேசாததால் போனை துண்டித்த போலீஸ் அதிகாரிக்கு வீட்டு உரிமையாளர் சுதீப் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆங்கிலம் தெரியாததால் தகவல் தொடர்பு பிரச்சனை காரணமாக போலீஸ் அதிகாரி போனை துண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஹெ டெக் நகரமான பெங்களூருவில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
இதனால் பெங்களூரு நகர போலீசாருக்கு அந்தந்த மாநிலங்களின் மொழிகள் தெரியாவிட்டாலும் கூட, அனைவருக்கும் பொது மொழியான ஆங்கிலத்தை தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். குறிப்பாக காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் காவலர்களுக்கு ஆங்கிலம் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். நல்ல வேளையாக கொள்ளையர்கள் ஸ்பெயின் நாட்டுக்காரர் ஜீசஸ் அப்ரியலை ஏதும் செய்யவில்லை.
அங்கு வேறு ஏதும் அசம்பாதவிதம் நடந்தால் என்னவாயிருக்கும்? ஆகவே பெங்களூரு போலீசார் இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடைபெறாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.