மம்தாவுக்கு ஆதரவாக வங்கதேச நடிகர் பிரசாரம்... நாட்டை விட்டு துரத்திய மத்திய அரசு!

By Asianet TamilFirst Published Apr 17, 2019, 8:30 AM IST
Highlights

வங்கதேச நடிகர் பிர்தோஸ் அகமது பிசினஸ் விசாவில் இந்தியாவுக்கு வந்தார். கொல்கத்தாவுக்கு வந்த அவர், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்காக கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் அக்கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து பிரசாரம் மேற்கொண்டார்.

மேற்கு வங்காளத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட வங்கதேச நடிகர் பிர்தோஸ் அகமது இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் 7 கட்டங்களாக நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்காளத்தில் 4 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சியின்  தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் வங்கதேச நடிகர் பிர்தோஸ் அகமது பிசினஸ் விசாவில் இந்தியாவுக்கு வந்தார். கொல்கத்தாவுக்கு வந்த அவர், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்காக கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் அக்கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து பிரசாரம் மேற்கொண்டார். இதை அறிந்த பாஜகவினர் கொந்தளித்தனர். இது  தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்று தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் செய்தது.
இந்த விஷயத்தை மிகக் கடுமையாக அணுகிய மத்திய அரசு, இதுதொடர்பாக அறிக்கை தருமாறு கொல்கத்தாவிலுள்ள மண்டல பதிவு அதிகாரிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதுதொடர்பான அறிக்கை மத்திய அரசுக்கு கிடைத்த நிலையில், பிர்தோஸ் அகமது விசா விதிகளை மீறி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவரது விசாவை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. உடனடியாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அதுமட்டுமல்ல, பிர்தோஸ் அகமதுவை கறுப்புப் பட்டியலிலும்  மத்திய அரசு சேர்க்கப்பட்டடுள்ளது. இதன்மூலம் அவர் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

click me!