ஆப்கனில் பெண்கல்விக்கான தடையை நீக்க ஐ.நா. வலியுறுத்தல்

By SG BalanFirst Published Jan 8, 2023, 10:52 AM IST
Highlights

ஆப்கானிஸ்தானில் பெண்கள் உயர்கல்வி கற்க விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் தூதர் மார்கஸ் போட்செல் வலியுறுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தாலிபான் பயங்கரவாதிகளின் ஆட்சி நடக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் அந்நாட்டுப் பெண்கள் யாரும் உயர்கல்வி மேற்கொள்ளக் கூடாது என்று தாலிபன்கள் தடை விதித்துள்ளனர்.

இந்தத் தடையை எதிர்த்து ஆப்கானிஸ்தான் மக்கள் மட்டுமின்றி பல உலக நாடுகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். சவுதி அரேபியா, கத்தார், துருக்கி போன்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடுகள்கூட தாலிபன் அரசின் இந்தப் பிற்போக்கான நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

இச்சூழலில், ஐக்கிய நாடுகள் சபையின் தூதர் மார்கஸ் போட்செல் சனிக்கிழமை தாலிபான் அரசின் உயர் கல்வித்துறை அமைச்சராக உள்ள நிதா முகமது நதீமை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது பெண்கள் உயர்கல்விக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக்கொள்வது தொடர்பாக பேசப்பட்டிருக்கிறது. உடனடியாக தடையை நீக்கி, உயர்கல்வி வாய்ப்புகளை பெண்களுக்கு அளிக்க வேண்டும் என்று ஐ.நா. தூதர் மார்கஸ் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகராக கெவின் மெக்கார்த்தி தேர்வு

அந்நாட்டில் பெண்கள் உயர்கல்விக்குத் தடை விதிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக ஐ.நா. அதிகாரி ஒருவர் ஆப்கன் சென்று தாலிபன் அமைச்சரைச் சந்தித்துள்ளார். ஆனால், இந்தச் சந்திப்பு பற்றி தாலிபன்கள் தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

துணைப் பிரதமர் அப்துல் சலாம் ஹனபி, உள்துறை அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானி, பொருளாதாரத்துறை அமைச்சர் காரிதின் முகமது ஹனிப், முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் ஆகியோரையும் ஐ.நா. தூதர் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது பெண்கள் உயர்கல்வி தடை, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்குத் தடை போன்றவற்றை நீக்குவது பற்றி விவாதித்திருக்கிறார்.

வரும் ஜனவரி 13ஆம் தேதி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் பிரச்சினை பற்றி விவாதிக்கப்பட உள்ளது. இச்சூழலில் நிகழ்ந்துள்ள ஐ.நா. தூதரின் சந்திப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.

11 நாட்கள்.. 13,560 கிமீ தூரம்.. உணவின்றி பறந்து கின்னஸ் சாதனை செய்த பறவை - எங்கு தெரியுமா?

click me!