மறு உத்தரவு வரும் வரை கட்டுமானப் பணிகளுக்கு தடை… டெல்லி அரசு அதிரடி!!

By Narendran SFirst Published Nov 29, 2021, 9:00 PM IST
Highlights

கட்டுமானப் பணிகள் மற்றும் கட்டுமான இடிப்பு நடவடிக்கைகளுக்கான தடை, மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து நீடிக்கும் என்று டெல்லி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கட்டுமானப் பணிகள் மற்றும் கட்டுமான இடிப்பு நடவடிக்கைகளுக்கான தடை, மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து நீடிக்கும் என்று டெல்லி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. இந்த நிலையில் மனிதர்கள் சுவாசிப்பதற்கு தகுதியானது அல்ல என்ற அளவிற்கு காற்றின் தரம் தற்போது காணப்படுகிறது. இங்கு பல்வேறு இடங்களில் AQI எனப்படும் காற்றின் தரக்குறியீடு 400-ஐ தாண்டியுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் காற்று மாசின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. பனிக்காலங்களில் காற்றில் மாசுத் துகள்கள் தங்கிவிடுவதால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகின்றனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்தன் மூலம் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. இதனால் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காற்று மாசை குறைக்க தண்ணீரை தெளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும்காற்று மாசைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நவம்பர் 21 ஆம் தேதி வரை கட்டுமானம், இடிப்பு பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அரசுத் துறைகளின் ஊழியர்கள் வீட்டிலிருந்து 100 சதவீதம் வேலை செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மேலும், வாகனங்களால் ஏற்படும் புகையின் அளவை குறைக்கும் வகையில் டெல்லி நகருக்குள் 26 ஆம் தேதி வரை லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டது. எனினும் காற்றின் தரம் எதிர்பார்த்த அளவிற்கு சீரடையவில்லை. எனவே, டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில்  கட்டுமானப் பணிகளுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் தடை விதித்தது. உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் மற்றும் கட்டுமான இடிப்பு நடவடிக்கைகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டது. எனினும், காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையிலேயே இருப்பதால்  கட்டுமானப் பணிகள் மற்றும் கட்டுமான இடிப்பு நடவடிக்கைகளுக்கான தடையானது, மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து நீடிக்கும் என டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் அறிவித்தார். அதேசமயம், பிளம்பிங் வேலை, உட்புற அலங்காரம், மின்சார வேலை மற்றும் தச்சு வேலை போன்ற மாசுபடுத்தாத கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

மேலும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுத்தப்படும் லாரிகள் தவிர்த்து பிற லாரிகள் நுழைவதற்கான தடை டிசம்பர் 7 வரை தொடரும் என்று கூறிய அவர், அதே நேரத்தில் எரிவாயுவால் இயக்கப்படும் லாரிகள் மற்றும் மின்சார லாரிகள் டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா ரூ. 5,000 நிதியுதவி வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் நேரடி வகுப்புகள் திங்கட்கிழமை தொடங்கப்பட்டன. அரசு அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. நகரின் 14 பகுதிகளில் உள்ள அரசு ஊழியர்  குடியிருப்புகளில் இருந்து ஊழியர்களை அழைத்துச் செல்வதற்காக, அரசு சிறப்பு பேருந்து சேவையையும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கட்டுமானப் பணிகள் மற்றும் கட்டுமான இடிப்பு நடவடிக்கைகளுக்கான தடை, மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

click me!