
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நாம் உயிரையும் கொடுக்க வேண்டும் அல்லது உயிரையும் எடுக்க வேண்டும் என்று ஐதராபாத் பா.ஜனதா எம்.எல்.ஏ. டி ராஜா சிங் சர்ச்சைக் குரிய வகையில் பேசியுள்ளார்.
2-வது முறையாக
கடந்த வாரம் இதேபோல் பேசிய கோஷா மஹால் தொகுதி எம்.எல்.ஏ.வான ராஜா சிங், அயோத்தில் ராமர் கோயில் கட்டுவதற்காக யார் தலையை வேண்டுமானாலும் வெட்டுவேன் என்று அச்சுறுத்தும் வகையில் பேசி இருந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், ஒருவாரத்துக்குள் 2-வது முறையாக ராஜா சிங் இதுபோல் பேசியுள்ளார்.
ஆதரவு அதிகரிப்பு
கடந்த சில நாட்களுக்கு முன் ஐதராபாதில் நடந்த அனுமன் ஜெயந்தி விழாவில் எம்.எல்.ஏ. ராஜா சிங் பேசினார். அவர்பேசிய வீடியோ இப்போது வைரலாகிவருகிறது. அதில் அவர், “ அடுத்து வரும் 2 ஆண்டுகளுக்குள் நாம் கண்டிப்பாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம். கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு அனுமன் ஜெயந்திக்கு ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். இதிலிருந்துராமர் கோயில் கட்டுவது தொடர்பான விழிப்புணர்வு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது, ஆதரவு பெருகி வருகிறது தெரிகிறது.
எடுக்கனும், கொடுக்கனும்
அயோத்தியில் ராமர் கட்டுவதற்காக நாம் அனைவரும் உயிரையும் கொடுக்க வேண்டும், தேவைப்பட்டால் யார் உயிரையும் எடுக்கவும் வேண்டும். யாரும் நம்மை ராமர் கட்டுவதை தடை செய்ய முடியாது.’’ என்று தெரிவித்திருந்தார்.
வழக்குப்பதிவு
இந்த பேச்சு வைரலாகப் பரவியதையடுத்து, மஜ்லிஸ் பச்சாவோ தெஹ்ரீக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அம்ஜீத் உல்லா கான், போலீசில் ராஜா சிங் மீது புகார் செய்தார். இதையடுத்து, தபீர்புரா போலீசார் மற்றவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசியதாக ஐ.பி.சி.295 ஏ பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.