
டெல்லியில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் குழந்தைகள் விளையாடும் போலி ரூபாய் நோட்டுகள் வந்த விவகாரத்தில், ஏ.டி.எம்.களுக்கு பணம் நிரப்பும் நிறுவனத்தின் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
போலி நோட்டுகள்
டெல்லி, சங்கம் விகார் பகுதியில் கடந்த 6-ந்தேதி ரோகித் என்பவர் அங்குள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையத்தில் ரூ. 8 ஆயிரம் பணம் எடுத்துள்ளார். அப்போது அதில் வந்த 4 ரூ.2 ஆயிரம் நோட்டுகளும் குழந்தைகள் விளையாடும் போலி ரூபாய் நோட்டுகளாக இருந்தன.
அதேபோல 26 வயதான சிதாந்த் ஷாசிகர் என்பவரும் இதே புகாரை தெரிவித்தார். எச்.சி.எல். நிறுவனத்தில் மென்பொருள் வல்லுநராக பணியாற்றி வரும் இவர் இது தொடர்பாக வங்கி மேலாளரிடம் புகார் தெரிவித்திருந்தார்.
புகார்
இதையடுத்து, எஸ்.பி.ஐ. வங்கி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இது குறித்து, டெல்லி கிழக்கு பகுதி போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணை
இதில், ஏ.டி.எம்.களில் இருந்து வரும் பணம் போலியாக இருக்கிறது என்றால், பணம் நிரப்பும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இதைச் செய்திருக்க முடியும் என சந்தேகித்து, அந்த குறிப்பிட்ட நிறுவனத்தில் விசாரணை நடத்தினர்.
கைது
அப்போது, போலி ரூபாய் நோட்டுகள் வந்த அந்த இரு ஏ.டி.எம்.களிலும் பணம் நிரப்பும் பணியைச் செய்த, 27 வயதான மோகித் இஷா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
பேட்டி
இது குறித்து டெல்லி தென்கிழக்கு போலீஸ் துணை ஆணையர் ரோமில் பானிவா கூறுகையில், “ போலி ரூபாய் நோட்டுகள் வந்தன என்று புகார் தெரிவிக்கப்பட்ட ஏந்த குறிப்பிட்ட ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணியைச் செய்த அந்த நிறுவனத்தில் விசாரணை நடத்தினோம்.
அதில் அந்த 2 ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணியை ஒரு ஊழியர் மட்டுமே செய்துள்ளார். இதை சாதகமாகப் பயன்படுத்தி அந்த ஊழியர், 5 உண்மையான ரூ.2 ஆயிரம் நோட்டுகளை எடுத்து விட்டு, அதற்கு பதிலாக தன்னிடம் இருந்த போலி ரூபாய் நோட்டுகளை மாற்றி, ரூ. 10 ஆயிரம் வரை மோசடி செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்தோம். டெல்லியில் உள்ள ஒரு கடையில் இந்த போலி ரூபாய்களை வாங்கியுள்ளார் '' எனத் தெரிவித்தார்.