
வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி மத்தியப்பிரதேச மாநிலம் சென்றுள்ளார். ரயில் சேவைகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, போபால் நகரில் பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சமீபத்தில் எதிர்க்கட்சிகள் சந்தித்த புகைப்படத்தை பார்த்தால் 20 லட்சம் கோடி ரூபாய் ஊழல் தான் தமக்கு தெரிவதாக விமர்சித்தார்.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி“சில தினங்களுக்கு முன்னர் ஃபோட்டோஷூட் நடந்தது. சில கட்சிகள் சேர்ந்து நடத்திய ஃபோட்டோஷூட் அது. அதில் கலந்து கொண்ட கட்சிகளின் வரலாற்றை பார்த்தால் தெரியும். எத்தனை பேர் அந்த ஃபோட்டோவில் இருந்தார்களோ, அவர்கள் அனைவரையும் சேர்த்தால் குறைந்தபட்சம் 20 லட்சம் கோடியாவது ஊழல் செய்திருப்பார்கள். அதில், காங்கிரஸ் மட்டும் லட்சக்கணக்கான ஊழல் செய்துள்ளது.” என விமர்சித்தார். தொடர்ந்து, நிலக்கரி, 2ஜி, சாரதா என சில ஊழல்களையும் அவர் பட்டியலிட்டார்.
முத்தலாக் பற்றிப் பேசிய பிரதமர் மோடி, எகிப்து, இந்தோனேசியா, கத்தார், ஜோர்டான், சிரியா, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் முத்தலாக் முறை அமலில் இல்லை என்று சுட்டிக்காட்டினார். 90 சதவீத சன்னி முஸ்லிம்களைக் கொண்ட எகிப்தில் முத்தலாக் முறை 80 ஆண்டுகளுக்கு முன்னரே ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். பிரதமர் மோடி அண்மையில் அரசு முறை பயணமாக எகிப்து சென்று திரும்பினார் என்பது கவனிக்கத்தக்கது.
நாடு முழுவதும் தக்காளி விலை கிடுகிடு உயர்வு: இன்னும் அதிகரிக்க வாய்ப்பு!
முத்தலாக் நடைமுறையை ஆதரிப்பவர்கள் முஸ்லிம் மகள்களுக்கு பெரிய அநீதியை இழைக்கிறார்கள். எனவேதான் முத்தலாக் நடைமுறையை ரத்து செய்த காரணத்தால் முஸ்லிம் பெண்கள் பாஜகவை ஆதரிக்கின்றனர் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
முஸ்லிம் சமூகத்தில் பல பிளவுகள் காணப்படுகின்றன என்ற பிரதமர் மோடி, ஏழை முஸ்லிம்களுக்கு சம உரிமை கிடைக்கவில்லை. சமூகத்தில் பின்தங்கியவர்களாகவும் கருதப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர். அவர்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. ஆனால், நாட்டின் குடிமக்களுக்காக 'சப்கா சத் சப்கா விகாஸ்' என்ற சிந்தனையுடன் பாஜக செயல்படுகிறது என்றும் தெரிவித்தார்.
ஒரே குடும்பத்துக்கு இரண்டு வெவ்வேறு விதமான சட்டத்திட்டங்கள் எப்படிப் பொருந்தும். அதேபோல் ஒரு தேசம் இரண்டு விதமான சட்டங்களைக் கொண்டு இயங்க முடியாது என பொது சிவில் சட்டத்தை ஆதரித்து பிரதமர் மோடி பேசினார்.
இஸ்லாம் சமூகம் குறித்து பிரதமர் மோடி கூறிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பலர் பிரதமர் மோடியை பாராட்டி ட்வீட் செய்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சைக் கேட்டதும் உணர்ச்சிவசப்பட்டதாக முஸ்லிம் கவிஞரும் எழுத்தாளருமான ஃபயாஸ் அகமது ஃபைசி தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம்களின் வலிகள் மற்றும் துன்பங்களைப் பற்றி பேசிய இந்தியாவின் முதல் பிரதமர் மோடி என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. அந்த கூட்டத்தில் 15 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன. கூட்டத்தின் முடிவில், 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்த்து ஒன்றாக போராட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை பாஜகவினர் கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒரு ஃபோட்டோஷூட் என அமித் ஷா விமர்சித்திருந்த நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் கட்சி நிர்வாகிகளிடம் பேசிய பிரதமர் மோடியும், எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை ஃபோட்டோஷூட் எனவும், அதனை பார்த்தால் ரூ.20 லட்சம் கோடிதான் தமக்கு தெரிகிறது என்றும் விமர்சித்துள்ளார்.