இந்தியாவில் கடந்த 10 ஆண்டிகளில் மாணவர்களின் தற்கொலைகள் 70 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது
தற்கொலைகளைத் தடுப்பதற்கான உலகளாவிய அர்ப்பணிப்பு மற்றும் நடவடிக்கையை வழங்குவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம், விழிப்புணர்வு நாளாக கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. “செயல் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்” என்ற கருப்பொருளில் 2021 முதல் 2023ஆம் ஆண்டு வரை தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்தவகையில், செப்டம்பர் 10ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருவதற்கிடையே, இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 70 சதவீதம் உயர்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
undefined
தேசிய குற்ற ஆவணக் காப்பக தகவலின்படி, 2021ஆம் ஆண்டில் நாட்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த தற்கொலைகளில் 8 சதவீதம் பேர் மாணவர்கள் (13,089). இதுவே, கடந்த 2011ஆம் ஆண்டி தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 5.7 சதவீதமாக (7,696) இருந்தது.
தேர்வுகள் மற்றும் கல்வி முறை
2021 ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் (1,834). கல்வி முறை மற்றும் தேர்வுகளின் அச்சுறுத்தல் ஆகியவை மாணவர்களின் தற்கொலைகளுக்கு காரனம் என பலரும் சுட்டிக்காட்டப்படும் போது, இந்த பிரச்சினை மிகவும் நுணுக்கமானது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
‘தற்கொலைகளுக்கு கல்வி அல்லது கற்றல் முறையைக் காரணம் கூற முடியாது.’ என்று தற்கொலை தடுப்பு உதவி மையமான தி சமரிடன்ஸ் மும்பையின் பயிற்சி மற்றும் மேம்பாட்டு உதவி இயக்குநர் சச்சின் சிதம்பரன் கூறியுள்ளார். “குழந்தைகள் தங்கள் சகாக்களுடன் எவ்வாறு பழகுவது, தவறுகள் செய்வது, சண்டையிடுவது, கற்றுக்கொள்வது, வருந்துவது, மன்னிப்பது என பலவற்றைக் கற்றுக்கொள்வதற்கு நேரம் கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.” என அவர் கூறுகிறார்.
கொரோனா தொற்றுநோய் இளைஞர்களிடையே மனநலப் பிரச்சினைகளை அதிகப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்ததாக தற்கொலை தடுப்பு இந்தியா அறக்கட்டளையின் நிறுவனர் நெல்சன் வினோத் மோசஸ் தெரிவித்துள்ளார். “இளைஞர்களின் மனநலப் பிரச்சினைகளை அதிகரிப்பதில் கோவிட்-19 ஒரு முக்கிய காரணியாக இருந்தது. இந்த காலகட்டத்தில், அவர்கள் டிஜிட்டல் கற்றலைச் சார்ந்து இருந்தனர். அவர்கள் மீண்டும் சாதாரண உலகத்திற்கு திரும்பியபோது, பலரால் சரியாக தொடர்பு கொள்ளவும், நட்பை வளர்த்துக் கொள்ளவும், சமூக ரீதியாக பிணைக்கவும் முடியவில்லை.” என அவர் தெரிவித்துள்ளார்.
கல்வி செயல்திறன் மற்றும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் பங்கேற்பது ஆகியவற்றுடன், சமூக ஊடகங்களின் கவர்ச்சி ஆகியவை இளைஞர்களுக்கு அழுத்தங்களை ஏற்படுத்துகின்றன. அதேசமயம், ஐஐடி அல்லது நீட் தேர்வில் வெற்றி பெறாவிட்டால், குழந்தைகள் போதுமான அளவு செயல்படவில்லை என அவர்களது பெற்றோர் அழுத்தம் கொடுக்கின்றனர் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இளைஞர்களிடையே மன ஆரோக்கியம்
2021ஆம் ஆண்டில் 18-30 வயதிற்குட்பட்டவர்களில் 56,543 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதில் 714 சம்பவங்கள் தேர்வில் தோல்வியடைந்ததால் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில், தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் 18 வயதிற்குட்பட்ட 864 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபோன்று தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்டவர்களில் 94.32 சதவீதம் பேர் 30 வயதுக்குட்பட்டவர்கள்.
மனநல ஆரோக்கிய சேவைக்கான வசதிகள் இந்தியாவின் அடுக்கு I நகரங்களில் குவிந்துள்ளது. ஆனால், இந்த நகரங்களுக்கு அப்பாலும் அந்த வசதி தேவைப்படும் மக்கள் பெரிய அளவில் இருப்பதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஜி20 இரவு விருந்து: உலகத் தலைவரகளுடன் பிரதமர் மோடி!
2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 21 நாடுகளில் 20,000 பேரிடம் யுனிசெஃப் மற்றும் கேலப் ஆகியவை எடுத்த கூட்டு ஆய்வில், இந்தியாவில் 15-24 வயதுடைய இளைஞர்களில் 41 சதவீதம் பேர் மட்டுமே மனநலப் பிரச்சினைகளுக்கு உதவி கேட்பது நல்லது என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், மற்ற நாடுகளில் இந்த நிலைமை முற்றிலும் மாறாக உள்ளது. மற்ற 21 நாடுகளில் இந்த சதவீதம் 83ஆக உள்ளது என்பதிலேயே இந்த விஷயத்தின் தீவிரத்தன்மையை உணர்ந்து கொள்ள முடியும்.
“தற்கொலைக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. திரைப்படங்கள் மற்றும் செய்தி ஊடகங்கள் இந்த சம்பவத்தை உணர்வுபூர்வமாக சித்தரிக்கப்படுவதை உறுதி செய்ய கவனம் செலுத்த வேண்டும். தற்கொலைகள் கோழைத்தனம் அல்லது வீரம் என இரண்டு வகையாகவும் சித்தரிக்கப்படாமல் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.” என்கிறார் சச்சின் சிதம்பரன்.
அரசாங்க முயற்சிகள் மற்றும் கொள்கை மாற்றங்கள்
இந்திய அரசும் அதன் கல்வி அமைப்புகளும் மாணவர்கள் எதிர்கொள்ளும் அழுத்தமான மனநலச் சவால்களை நிவர்த்தி செய்ய முனைப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) கடந்த 25 ஆண்டுகளாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தேர்வு முடிவுகள் தொடர்பான மன அழுத்தத்தை போக்க ஆலோசனைகளை வழங்கி வருகிறது. ஜனவரி 2023 இல், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூட்டு முயற்சியான தேசிய தற்கொலை தடுப்பு உத்தி வெளியிடப்பட்டது.
பிராந்திய மொழிகளில் தொழில்நுட்பக் கல்வியை அறிமுகப்படுத்துதல் போன்ற பல்வேறு முன்முயற்சிகளை கல்வி அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. இவை அனைத்தும் கல்வி அழுத்தத்தைக் குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளன.
"மனோதர்பன்" என்ற அரசாங்கத்தின் முன்முயற்சியின் கீழ், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பங்களுக்கு உளவியல் ஆதரவை வழங்க விரிவான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. கொரோனாவின் போது மட்டுமல்ல, அதற்குப் பிந்தைய காலத்திலும் மன ஆரோக்கியத்தை இவை உறுதி செய்கின்றன.
(உங்களுக்கு தற்கொலை எண்ணங்கள் இருந்தாலோ அல்லது அந்த எண்ணத்தில் இருக்கும் நண்பர்களைப் பற்றி கவலைப்பட்டாலோ அல்லது உணர்ச்சிபூர்வமான ஆதரவு தேவைப்பட்டாலோ, சினேகா அறக்கட்டளையை 044-24640050 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். உங்கள் கவலைகளுக்கு செவி சாய்க்க பலரும் இருக்கின்றனர். உங்களது உயிர் அளப்பரிய சொத்து. அதனை தயவு செய்து மாய்த்துக் கொள்ளாதீர்கள். தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் கண்டிப்பாக கூடாது. எந்த வித பிரச்சினைக்கும் அது தீர்வல்ல.)