ஹவாலா வழக்கு டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் கைது... அமலாக்கத் துறை அதிரடி நடவடிக்கை...!

By Kevin KaarkiFirst Published May 31, 2022, 9:49 AM IST
Highlights

முன்னதாக ஆகஸ்ட் 2017 வாக்கில் சி.பி.ஐ. தரப்பில் சத்யேந்தர் ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

டெல்லி சுகாதார துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார். சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை அமலாக்க துறையினர் கைது செய்துள்ளனர். 

கொல்கத்தாவை சேர்ந்த நிறுவனத்துடன் சேர்ந்து கொண்டு 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் சட்ட விரோதமான பணப் பரிமாற்றம் செய்ததாக அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் 2017 வாக்கில் சி.பி.ஐ. தரப்பில் சத்யேந்தர் ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

சட்டவிரோத பணப் பரிமாற்றம்:

அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அவரது குடும்பத்தார் சேர்ந்து கொண்டு ரூ. 1 கோடியே 62 லட்சம் தொகையை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்துள்ளனர். சத்யேந்தர் ஜெயின் குடும்பத்தார் எவ்வித வியாபார நோக்கமும் இன்றி போலியாக நான்கு சிறு நிறுவனங்களை துவங்கினர். இதன் மூலம் 2011 மற்றும் 2012 காலக்கட்டத்தில் ரூ. 11 கோடியே 78 லட்சமும், 2015 மற்றும் 2016 காலக்கட்டத்தில் ரூ. 4 கோடியே 63 லட்சம் தொகையை பரிமாற்றம் செய்துள்ளனர். 

சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கை முகாந்திரமாக எடுத்துக் கொண்டு அமலாக்கத் துறை இந்த சம்பவத்தில் தனது விசாரணையை தொடங்கியது. அதன்படி விசாரணை நிறைவுற்ற நிலையில், அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 

அமைச்சர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மத்திய அரசிடையே புதிய மோதலை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய அரசு அமலாக்கத் துறையை கையில் வைத்துக் கொண்டு மாநில அரசுகளை துன்புறுத்துவதாக எதிர்கட்சி தலைவர்களான அறவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி மற்றும் சந்திரசேகர ராவ் ஆகியோர் குற்றம்சாட்டி வரும் நிலையில், அமைச்சர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

தேர்தல் பொறுப்பாளர்:

விரைவில் நடைபெற இருக்கும் இமாச்சல பிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளகாக ஆம் ஆத்மி சார்பில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் நியமனம் செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில், அரசியல் காரணங்களுக்காகவே அமைச்சர் கைது திட்டமிட்டு நடத்தப்பட்டு இருக்கிறது என டெல்லி மாநில துணை முதல்வர் மனிஷ் சிசோதியா தனது ட்விட்டரில் தெரிவித்து உள்ளார். 

“கடந்த எட்டு ஆண்டுகளாக சத்யேந்தர் ஜெயின் மீது பொய் வழக்கு போடப்பட்டு இருக்கிறது. இன்று வரை அமலாக்கத் துறை அவரை பலமுறை அழைத்துள்ளது. அவர்களுக்கு எதுவும் கிடைக்காததால், இடையில் பல ஆண்டுகளாக அமலாக்கத் துறை அவரை அழைத்து விசாரிப்பதை நிறுத்தி இருந்தது. தற்போது இமாச்சல பிரதேச தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் நிலையில், மீண்டும் அவர்கள் துவங்கி விட்டனர்,” என துணை முதல்வர் மனிஷ் சிசோதியா ட்விட் செய்துள்ளார். 

click me!