வீட்டு வாடகை கொடுக்க முடியாதவர்களின் வாடகையை அரசே கொடுக்கும்.. டெல்லி முதல்வர் அதிரடி

By karthikeyan VFirst Published Mar 29, 2020, 8:23 PM IST
Highlights

கொரோனாவால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வருமானம் இல்லாமல் தவிக்கும் மக்களிடம், வீட்டு வாடகை கேட்டு தொல்லை கொடுக்கக்கூடாது என்றும், வீட்டு வாடகை கொடுக்க முடியாத வெளிமாநிலத்தவர்களுக்கு டெல்லி அரசே வீட்டு வாடகையை கொடுக்கும் எனவும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
 

கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், சமூக தொற்றாக அது மாறாமல் தடுப்பதற்காக, ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் ஏழை, எளிய மக்களும் கூலி தொழிலாளர்களும் பிழைப்புக்காக சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய பெருநகரங்களுக்கு புலம்பெயர்ந்தவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

சமூக விலகலை உறுதி செய்வதற்காகத்தான் ஊரடங்கே அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த நோக்கத்தையே சிதைக்கும் விதமாக, உத்தர பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு பிழைப்புக்காக வந்தவர்கள், கூட்டம் கூட்டமாக டெல்லியை விட்டு வெளியேறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

இந்நிலையில், டெல்லியில் இருக்கும் வெளிமாநிலத்தவர்கள், டெல்லியை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அவர்கள் தற்போதிருக்கும் இடத்திலேயே இருக்குமாறும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவுறுத்தியுள்ளார்.

டெல்லியில் இருக்கும் வெளிமாநிலத்தவர்கள், டெல்லியை விட்டு வெளியேற வேண்டாம். இடமில்லாமல் இருப்பவர்களை தங்கவைக்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளிமாநிலத்தவருக்கு உணவு வழங்கும்விதமாக சமூக சமையற்கூடங்கள் அமைக்கப்பட்டு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

எனவே யாரும் இருக்கும் இடங்களை விட்டு வெளியேற வேண்டாம். டெல்லியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருப்பவர்களிடம், வீட்டு ஓனர்கள் வாடகை கேட்டு தொல்லை கொடுக்கக்கூடாது. வாடகை கொடுக்க முடியாதவர்களுக்காக அரசே வாடகை வழங்கும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

விடுதிகள், வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருப்பவர்கள் என யாரையும் அதன் ஓனர்கள் வெளியேற்றக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

click me!