
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் கடந்த 8-ஆம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் ஒருவரான விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். அவர் பெங்களூருவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியது.
கடும் பனிமூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பான தீவிர விசாரணையில் இந்தியா விமானப்படை ஈடுபட்டுள்ளது. ஏர்மார்ஷல் மன்வேந்திரசிங் தலைமையிலான விசாரணை குழுவினர் அந்த பகுதியில் முகாமிட்டு விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தமிழக போலீசாரும் இந்த விபத்து குறித்து வழக்குபதிந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி முத்து மாணிக்கம் நியமிக்கபட்டுள்ளார். இதனிடையே விபத்து தொடர்பாக விமானபடை உயர் அதிகாரி தலைமையில் 5 வது நாளாக இன்று தீவர விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. விபத்து நிகழ்ந்த நஞ்சப்ப சத்திரம் பகுதியில் வெளிநபர்கள் நுழைய கட்டுபாடுகள் விதிக்கபட்டு, ஹெலிகாப்டரின் பாகங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில் இவ்விபத்தில் உயிரிழந்த வீரர்களில் ஒருவரான ஹவில்தார் சத்பால் ஹெலிகாப்டரில் இருந்தபோது அவருடன் கடைசியாக பேசியதாக அவரது மகன் பிகல் ராய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிகல் ராய் கூறுகையில், ''அரசின் ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். எனது தந்தை ஹெலிகாப்டரில் இருந்தபோது நான் அவருடன் கடைசியாக பேசினேன். விபத்து நிகழுமென்று நான் கற்பனை செய்து கூட பார்த்ததில்லை'' என்றார்.