ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முக்கிய பிரபலங்கள் யார்? யார்? அதிர்ச்சி தகவல்..

Published : Dec 08, 2021, 06:02 PM ISTUpdated : Dec 08, 2021, 08:49 PM IST
ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முக்கிய பிரபலங்கள் யார்? யார்? அதிர்ச்சி தகவல்..

சுருக்கம்

குன்னூர் அருகே முப்படை ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த பெரும்பாலானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில், விமானம், ஹெலிகாப்டர் போன்றவை விபத்தில் சிக்கி, முக்கிய பிரபலங்கள் பலர் இறந்துள்ளனர். அந்த நிலையில் இதுவரை விமான மற்றும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிரபலங்கள் யார் யார் என்று பார்க்கலாம்.  

ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ஆர் ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் உயிரிழந்தார். இவர் ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சராக இருமுறை பதவி வகித்தவர்.கடந்த 2009ம் ஆண்டில் இவர் பயணித்த  ஹெலிகாப்டர் ருத்ரகொண்டா மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானதில்,ராஜசேகர ரெட்டி உயிரிழந்தார்.

இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி. இந்திரா காந்திக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் மிகப் பெரிய தலைவராகுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சஞ்சய் காந்தி கடந்த 1980ம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்தார். தில்லி விமானக் கழகத்தின் புதிய விமானம் ஒன்றை இவர் ஓட்டிக் கொண்டிருந்த போது, விமானம் கட்டுப்பாட்டை இழந்து, நொறுங்கி விழுந்தது. விமானத்தின் ஒரே பயணியாக இருந்த இராணுவத்தலைவர் சுபாஸ் சக்சேனாவும் அந்த விபத்தில் இறந்தார்.

நடிகை சவுந்தர்யா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அம்மன், அருணாச்சலம், படையப்பா உட்பட  படங்களில் நடித்து,தமிழ் திரையுலகில் தனக்கென ரசிகர்களை உருவாக்கியவர். தெலுங்கு சினிமாவின் நவீன சாவித்திரி என்று அழைக்கும் அளவுக்கு நடிப்பு திறமையால் மக்களின் மனங்களை வென்றவர். கடந்த 2004ம் ஆண்டு கரிம்நகரில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் பயணித்த போது, அந்த விமானம் வெடித்து விபத்துக்குள்ளானதில் இவர் உயிரிழந்தார்.

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் என்.வி.என் சோமு. இவர் திமுக சார்பில் வட சென்னை தொகுதியில் இன்று இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், இவர் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த போது, 1997 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த பி.சுப்பராயனின் மூன்றாவது மகன் மோகன் குமாரமங்கலம். இவர் இந்திய பொதுவுடைமை கட்சியிலும் காங்கிரஸ் கட்சியிலும் இருந்துள்ளார்.  மத்திய இரும்பு மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்துள்ள இவர், கடந்த 1973ம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்தார். இவர் பயன்படுத்தும் பார்க்கர் பேனா மற்றும் காதில் அணியும் கருவி மூலம் இவரது உடல் அடையாளம் காணப்பட்டது.

ஜி.எம்.சி பாலயோகி, ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். இந்திய நாடாளுமன்றத்தின் 12வது மக்களவை தலைவராக பதவி வகித்துள்ளார் . மேலும் இவர் மக்களவை சபாநாயகராக இருந்தபோதே கடந்த 2002ம் ஆண்டு  ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

அருணாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் டோர்ஜி காண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். 2011ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி இவர் பயணித்த ஹெலிகாப்டர் காணாமல் போனது. பின்னர் மே 5ம் தேதி டோர்ஜி காண்டுவின் இறப்பை  அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். இவர் சென்ற ஹெலிகாப்டர் ஷீலா-பள்ளத்தாக்கு அருகே விபத்துக்குள்ளானது என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஜிண்டல் என்று அழைக்கப்படும் ஓம் பிரகாஷ்  ஜிண்டல். மாபெரும் தொழில் அதிபராக திகழ்ந்தவர்.  ஹரியானாவின் மின் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இவர் 2005ம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

இந்நிலையில் தற்போது குன்னூரில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேர்களில் 13 பேர் உயிரிழந்துள்ளாதாக ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.மேலும் இறந்தவர்களின் டி.என்.ஐ பரிசோதனை மூலம் அவர்களை அடையாளம் காணபடும் என்றும் அதில் தெரிவிக்கபட்டுள்ளது. இதனிடையே விபத்தில் சிக்கிய இராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்தின் நிலைக்குறித்து இன்னும் எந்த தகவலும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. மேலும் இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக விமானப்படை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

நாட்டுக்கு ஒரு மோடி போதுமா? ஹனுமான்–ராமன் உதாரணம்… மோடி பற்றி ஜெய்சங்கர் ஓப்பன் டாக்
அஸ்ஸாமை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாற்ற காங்கிரஸ் சதி செய்தது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு