கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி வரும் தேர்தல் முடிவுகள்?

By Manikanda PrabuFirst Published Jun 4, 2024, 1:05 PM IST
Highlights

மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி வருவது அரசியல் அரங்கில் கவனம் ஈர்த்துள்ளது

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் பாஜகவுக்கு சாதகமாக இருந்த நிலையில், தேர்தல் முடிவுகள் கடும்  போட்டியாக உள்ளன.

Latest Videos

முன்னதாக, மக்களவை தேர்தலின் அனைத்து கட்ட வாக்குப்பதிவுகளும் முடிவடைந்ததையடுத்து, பெரிதும் எதிர்பார்ப்புக்குள்ளான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் கடந்த 1ஆம் தேதி மாலை வெளியாகின. பல ஊடக நிறுவனங்கள் தங்களது கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. பெரும்பாலான கருத்து கணிப்புகள் பாஜக கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என கணித்திருந்தன. அதேபோல், இந்தியா கூட்டணி 145 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் பெரும்பாலான கருத்து கணிப்புகள் கணித்திருந்தன. 

Loksabha election result 2024 நீயா? நானா? வட, மத்திய இந்தியா முன்னிலை நிலவரம் என்ன?

மேலும், பெருமான்மைக்கு தேவையான 272 இடங்களுக்கு அதிகமாக பாஜக தனித்து வெற்றி பெறும் எனவும் கணிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் அதற்கு நேர்மாறாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 294 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 228 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. பாஜகவை பொறுத்தவரை அக்கட்சி மட்டும் தனியாக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட குறைவான இடங்களிலேயே முன்னிலை வகித்து வருகிறது. அக்கட்சி மட்டும் 241 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

முன்னதாக, மக்களவைத் தேர்தல் முடிவுகள் கருத்துக்கணிப்புகளுக்கு எதிர் மாறாக வரும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நம்பிக்கை தெரிவித்திருந்தார். அதேபோல், “இது கருத்துக்கணிப்பு அல்ல. மோடி ஊடகத்தின் கணிப்பு. அவரது கற்பனை கருத்துக்கணிப்பு. இந்தியா கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெறும்.” என ராகுல் காந்தி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!