
ரூபாய் நோட்டு தடை நடவடிக்கையை நாட்டில் அமல்படுத்தியதற்காக மத்தியில் ஆளும் ஆட்சியாளர்கள் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பார்களா? என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு ஆண்டு நிறைவு
ரூபாய் நோட்டு தடையை பிரதமர் மோடி அறிவித்து நேற்றுடன் ஒரு ஆண்டு முடிந்தது. இந்த பா.ஜனதா கட்சியினர் கருப்புபணத்துக்கு எதிரான நாளாகவும் நாடுமுழுவதும் கொண்டாடினர். அதேசமயம், காங்கிரஸ் கட்சியினர் கறுப்புதினமாக அனுசரித்தனர்.
‘இந்த நாள் கடந்த ஆண்டு’
ரூபாய் நோட்டு தடை முதலாம் ஆண்டு குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் டுவிட்டரில் பரபரப்பு கருத்துக்களை கூறியுள்ளார். ‘இந்த நாள், கடந்த ஆண்டு’ என்ற தலைப்பில் அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது-
மன்னிப்பு கேட்பீர்களா?
பணக்காரர்கள், கோடீஸ்வரர்கள் தங்களின் கருப்புபணத்தை மாற்றி பளபளக்கும் புத்தம் புதிய வெள்ளை நோட்டுகளாக மாற்றிக் கொள்ள கண்டுபிடிக்கப்பட்ட வழிதான் ரூபாய் நோட்டு தடை. இந்த சீர்குலைவு நடவடிக்கையால், கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, உதவி செய்ய ஆதரவின்றி தவித்தார்கள்.
அமைப்பு சாரா துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் சுற்றவிடப்பட்டார்கள். இந்த மிகப்பெரிய தவறைச் செய்த மத்தியில் ஆளும் ஆட்சியாளர்கள்(பிரதமர் மோடி) மன்னிப்பு கேட்கமாட்டார்களா?