
பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கையால் ஜனவரி முதல் ஏப்ரல் வரை சுமார் 15 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தகவல் அளித்துள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையாக ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவுப்பு வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
இதையடுத்து, இந்த நாளை கருப்பு நாளாக அனுசரித்து எதிர்கட்சியினர் இன்று ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
பணமதிப்புக் குறைப்பால் பல நன்மைகள் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகமும், மத்திய நிதி அமைச்சகமும் பட்டியலிட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் ஒரு பரபரப்பு தகவலை அளித்துள்ளது. அதில், இந்த வருடம் ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரை சுமார் 15 லட்சம் பேர் தங்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகவும் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான கால கட்டத்தில் பணி புரிவோர் எண்ணிக்கை 40,65,00,000 லிருந்து 40,50,00,000 ஆக குறைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
உற்பத்தித் துறையில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பல மூடப்பட்டதால் வேலை இழப்பு அதிகம் காணப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.
தினசரி ஊதியம் பெறுபவர்களும், கீழ் மட்ட பணியாளர்களுக்கும் வேலை இழப்பு அதிகமாக காணப்படுவதாகவும், தகவல் தொழில் நுட்பத் துறையில் அதிகம் பேர் வேலை இழந்துள்ளனர் என்றும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தகவல் அளித்துள்ளது.
கடந்த வருடம் இதே கால கட்டத்தில் வேலைவாய்ப்பை இழந்தோரை விட இது பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.