கர்நாடக சட்டசபையில் கடும் அமளிக்கு இடையே மதமாற்ற எதிர்ப்பு மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.
உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா அறிமுகப்படுத்திய கர்நாடக மத சுதந்திர உரிமைப் பாதுகாப்பு மசோதாவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. கர்நாடகத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாகவும், இதை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறி வந்தார். பெலகாவி சுவர்ணசவுதாவில் நடைபெறும் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதிப்பட கூறினார். அதன்படி கர்நாடக மந்திரிசபை கூட்டம் நேற்று முன்தினம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பெலகாவியில் நடைபெற்றது.
undefined
இந்த மசோதாவை நேற்று மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கர்நாடக சட்டசபையில் தாக்கல் செய்தார். இதற்குக் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாகக் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் மதமாற்ற எதிர்ப்பு மசோதா நகலைச் சட்டசபையிலேயே கிழித்து எறிந்தார். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தொடக்கம் முதலே இந்த மசோதாவைக் காங்கிரஸ் எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. தங்களுக்கு முன்கூட்டியே எந்த தகவலையும் தெரிவிக்காமல் அரசு மசோதாவை தாக்கல் செய்துள்ளதாக சித்தராமையா குற்றம்சாட்டினார். காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து குரலை உயர்த்தி பேசி எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு ஆளும் பா.ஜனதா உறுப்பினர்கள் மசோதாவை ஆதரித்து பேசினர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
அப்போது ஆவேசமடைந்த மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், மசோதா நகலை கிழித்து எறிந்தார். இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது. டி.கே.சிவக்குமாரின் இந்த செயலுக்கு சபாநாயகர் காகேரி கடும் ஆட்சேபனை தெரிவித்தார். இது ஒழுங்கீனமான செயல் என்று அவர் கண்டித்தார். இந்த மதமாற்ற தடை மசோதா குறித்து முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்று கூறி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த மசோதாவை ஜனதா தளம் கட்சியும் எதிர்த்துள்ளது. ஆனால் அக்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்யவில்லை. விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டி இருப்பதால் தாங்கள் வெளிநடப்பு செய்யவில்லை என்று அக்கட்சியின் துணைத்தலைவர் பண்டப்பா காசம்பூர் விளக்கம் அளித்தார். கர்நாடக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்த மதமாற்ற தடை சட்ட மசோதாவில் சட்டத்தை மீறுபவர்களுக்கு என்னென்ன தண்டனை கிடைக்கும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
*ஒருவரை கட்டாயப்படுத்தி மதம் மாற்றப்பட்டு இருந்தால், அதுபற்றி குடும்ப ரத்த உறவுகள் அல்லது உறவினர்கள், நண்பர்கள் போலீசில் புகார் தெரிவிக்கலாம்.
*இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அத்துடன் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
*18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், மனநிலை சரி இல்லாதவர்கள், பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினரை மதம் மாற்றினால் அதில் தவறு செய்பவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.
*கூட்டமாக மதம் மாற்றுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
*பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணமாக வழங்க குற்றவாளிகளுக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க கோர்ட்டுகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
*இதே குற்றத்தை 2-வது முறையாக செய்து தண்டிக்கப்பட்டால் அத்தகையவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
*கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும்.
மதம் மாற விரும்புகிறவர்கள் அதற்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள படிவத்தில் மாவட்ட கலெக்டரிடம் 30 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். மதம் மாறும் நிகழ்வு குறித்த விவரத்தை வழங்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தார் அலுவலக தகவல் பலகையில் மதம் மாறுபவர்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும். அதுகுறித்து ஆட்சேபனைகளை வரவேற்க 30 நாட்கள் காலஅவகாசம் வழங்க வேண்டும்.
ஒருவேளை ஏதாவது ஆட்சேபனைகள் வந்தால் அதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரி மூலம் விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணை மூலம் மாவட்ட கலெக்டர், மதமாற்றத்தில் தவறு நடந்துள்ளது என்று உணர்ந்தால், அதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசில் புகார் அளிக்க வேண்டும். இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மதமாற்றம் தடை சட்ட மசோதாவில் மதம் மாற்றும் நோக்கில் என்னென்ன விஷயங்கள் செய்யக்கூடாது என்ற விவரம் குறிப்பிடப்பட்டு உள்ளது.
* மதம் மாற்றும் நோக்கில் பரிசு பொருள், பணம் கொடுக்க கூடாது.
* மத அமைப்புகள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் வேலை, இலவச கல்வி வழங்க கூடாது.
* திருமணம் செய்வதாக உறுதி அளித்தல்-நல்ல வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளித்தல் போன்றவை செய்யக் கூடாது.
* ஒரு மதத்திற்கு எதிராக மற்றொரு மதத்தை மிகைப்படுத்த கூடாது.
* ஒருவரை மன ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ கட்டாயப்படுத்துதல் குற்றம்.
* கூட்டமாக (அதாவது 2 பேருக்கு மேல்) ஒரே நேரத்தில் மதம் மாற்றுதல் சட்டவிரோதம்.
* 18 வயதுக்கு கீழ் உள்ளோர், பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினரை மதம் மாற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.